இந்துார் உயிரிழப்பு விவகாரத்தில் அரசியல் செய்கிறார் ராகுல்: டில்லியில் பா.ஜ., பாய்ச்சல்

8


'மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து பலர் உயிரிழந்த சம்பவத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல், பொறுப்பு மிக்க அரசியலமைப்பு சட்டப் பதவியில் இருப்பதை மறந்துவிட்டு, சராசரி அரசியல்வாதியைப் போல நடந்து கொள்கிறார்' என, பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது.



ஆறுதல்





மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில், பகிரத்புரா பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து பலர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், அந்தப் பகுதிக்கு நேரில் செ ன்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.


பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசிய அவர், இந்த சம்பவத்திற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், உரிய இழப்பீடும், மருத்துவ செலவுக்கான உதவியும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



குழப்பம்



இந்நிலையில், நேற்று டில்லியில் பா.ஜ., மூத்த தலைவர் ஷா நவாஸ் உசேன் கூறியதாவது:



இந்துார் சம்பவத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அவை அனைத்தையும் அரசு ஏற்கனவே எடுத்துவிட்டது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் ஒவ்வொருவர் மீதும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது.


இது மிகவும் தீவிரமான விவகாரம். ஆனால், காங்., மூத்த எம்.பி., ராகுல், இந்த சம்பவத்தில் முழுக்க முழுக்க அரசியல் செய்ய விரும்புகிறார்; முடிந்தவரை குழப்பம் ஏற்படுத்த விரும்புகிறார்.



அரசியலமைப்பின் பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் அவர் அதை மறந்துவிட்டு, சராசரி அரசியல்வாதியைப் போல இந்த விஷயத்தை கையாள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.





- நமது டில்லி நிருபர் -

Advertisement