திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் பார்வேட்டை விழா கோலாகலம்

உத்திரமேரூர்:திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில் பார்வேட்டை திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.

உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் பாலாற்றங்கரையில் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும், மாட்டுப் பொங்கல் அன்று பார்வேட்டை விழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடந்தது.

இந்த விழாவையொட்டி, காஞ்சிபுரத்தில் இருந்து பல்வேறு பகுதி வழியாக ஊர்வலமாக வந்த வரதராஜ பெருமாள், மாலை, 4:00 மணிக்கு, பழைய சீவரம் மலையில் உள்ள, லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் வந்தடைந்தார்.

அங்கு சுவாமிக்கு, திருமஞ்சனம் மற்றும் பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அதை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில், வரதராஜ பெருமாள், லட்சுமி நரசிம்ம சுவாமி எழுந்தருளினர்.

சுவாமிகளுக்கு நாதஸ்வரம், மேள வாத்தியம் முழங்க, அப்பகுதி பாலாற்றின் வழியாக திருமுக்கூடலில் உள்ள அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலை வந்தடைந்தனர். அங்கு, ஏற்கனவே சாலவாக்கம் சீனிவாசப் உட்பட மற்றும் காவாந்தண்டலம் லட்சுமி நாராயண பெருமாள் உட்பட, ஐந்து சுவாமிகளும், தங்களுக்கான தனி, தனி சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Advertisement