தேயிலையை தாக்கும் சிவப்பு சிலந்தி நோயால் பாதிப்பு : மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம்

பந்தலுார்: பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதி தேயிலை தோட்டங்களில், சிவப்பு சிலந்தி நோய் பரவல் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் போதிய விலை கிடைக்காத காரணத்தால், விவசாயிகள் தேயிலை செடிகளை அகற்றி மாற்று விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். இந்நிலையில், இங்கு மீதமுள்ள தேயிலை தோட்டங்களில் சிவப்பு சிலந்தி நோய் பரவி வருவதால், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சிலந்தி பூச்சி தேயிலையை தாக்கும், 400 நோய் கிருமிகள் உள்ளதுடன், 58 வகையான பூஞ்சைகள் உள்ளதாகவும் உபாசியின், ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது. இதில், குறிப்பாக தென் மாநிலங்களில் சிவப்பு சிலந்திப்பேன் பூச்சி (எரியோபைட் அகரினா) தாக்குதலால் தேயிலை விவசாயம் பெரும் பாதிப்பில் உள்ளது.

இந்த நோயால் பசுந்தேயிலை இலைகள் வெளிர் நிறமாகி, மேல் நோக்கி சுருண்டு இளம் சிவப்பு நிறமாக மாறும். அதில், சிவப்பு சிலந்தி பூச்சிகள் காணப்படும். நவ., மாதம் துவங்கி ஜூன் மாதம் வரை இதன் பாதிப்பு இருக்கும். தற்போது, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதி தேயிலை தோட்டங்களில், சிவப்பு சிலந்தி தாக்குதலால் பசுமையான தேயிலை செடிகள், சிவப்பு நிறத்திற்கு மாறி வருவதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சிறு விவசாயிகள் சங்க நிர்வாகி விஜயகுமார் கூறுகையில், ''சமீப காலமாக தேயிலை தொழிலை சார்ந்து உள்ள விவசாயிகள், பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் தினசரி நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். தற்போது, இப்பகுதிகளில், 1,000 ஏக்கர் வரை சிவப்பு சிலந்தி நோய் பாதித்துள்ள நிலையில், விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையில் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார்.

Advertisement