ரயில் நிலையத்தில் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரிக்கை

பெண்ணாடம்: பெண்ணாடம் ரயில் நிலையத்தில் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரம் - திருச்சி மார்க்கத்தில் பெண்ணாடம் ரயில் நிலையம் உள்ளது. இங்கு விழுப்புரம் - மதுரை; மதுரை - விழுப்புரம்; விருத்தாசலம் - திருச்சி; விழுப்புரம் - திருச்சி பாசஞ்சர் மற்றும் குருவாயூர், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்கின்றன.

பெண்ணாடம் ரயில் நிலையத்திற்கு பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

மேலும், ரயில் நிலையத்தை பயன்படுத்தி, திட்டக்குடி, தொழுதுார், பெண்ணாடம், இறையூர், முருகன்குடி, ஆவினங்குடி, பெ.கொல்லத்தங்குறிச்சி, கொத்தட்டை உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு திருச்சி, சென்னை, விழுப்புரம், திருப்பதி, மதுரை, ராமேஸ்வரம், குருவாயூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், பயணிகளின் குடிநீர் வசதிக்காக ரயில் நிலைய நடைமேடையில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால் போதிய பராமரிப்பின்றி சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதனால் நீண்ட துாரத்தில் இருந்து வரும் ரயில் பயணிகள் மற்றும் ரயிலுக்கு காத்திருப்போர் சுகாதாரமான குடிநீரின்றி கடும் அவதியடைகின்றனர். சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமென ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement