எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு

18

அதிமுகவைத் தொடங்கிய பின்னர், அதனை வெற்றிக் கட்சியாக்க... வெற்றிடத்தை வெற்றி இடமாக்க தமிழக முழுவதும் எம்ஜிஆர் சூறாவளிச் சுற்றுப்பயணம் நிகழ்த்திக் கொண்டிருந்தார். எம்ஜிஆரின் அந்த சுற்றுப்பயணத்தின் போது, கருணாநிதி ஆட்சி. கருணாநிதியை எதிர்த்துத் தான் தன் கட்சியை எம்ஜிஆர் வார்த்தெடுத்து வழி நடத்திக் கொண்டிருந்தார். எம்ஜிஆரின் சுற்றுப்பயணத்திற்குப் போதிய அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை.


இது எம்ஜிஆருக்கும், அவரின் ஆத்மார்த்தமான தொண்டர்களுக்கும் இடையே மிகுந்த வசதியாகப் போய்விட்டது. 'ரோடு ஷோ' என்ற வகையில், திறந்த ஜீப்பில் நின்றவாறு, மக்கள் வெள்ளத்தில் எம்ஜிஆரின் வாகனம் ஆமை வேகத்தில் நகர்ந்தது. எம்ஜிஆர் தன்னைச் சூழ்ந்து வந்த ஒவ்வொரு தொண்டரையும் பார்த்துக் கையசைப்பது, கைக்குலுக்குவது, குழந்தைகளைக் கண்டால் தூக்கி வைத்துக் கொஞ்சுவது, அருகில் இருந்தால் கட்டி அணைப்பது, ஆனந்த கண்ணீர் வடிக்கும் மூதாட்டிகளை நெருங்க வைத்துக் கண்ணீர் துடைப்பது என்றவாறு, எம்ஜிஆரின் அனைத்து அணுகுமுறைகளும் தமிழக அரசியலில் ஒரு புதிய அனுபவத்தை அறிமுகம் செய்திருந்தன.

இவ்வாறாக சேலத்திற்கு பிரச்சாரம் செய்யச் சென்றிருந்த எம்ஜிஆர், அங்கே பஸ் ஸ்டேண்ட் அருகே ஓரியண்டல் தியேட்டருக்குப் பக்கத்தில் திறந்த ஜீப்பில் பவனி வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு தொண்டர் எம்ஜிஆர் பயணித்த வாகனத்தின் குறுக்கே படுத்து விட்டார்.
அப்போது எம்ஜிஆரைச் சுற்றிச் சூழ்ந்து நின்று இருந்த எம்ஜிஆரின் மெய்க்காப்பாளர்கள் அங்கே ஓடிச் சென்றார்கள். வாகனத்தின் குறுக்கே படுத்துக் கிடந்த அந்த இளைஞரைக் குண்டுகட்டாகத் தூக்கினார்கள்.

எம்ஜிஆரோ, 'அந்த இளைஞரை என் அருகில் கொண்டு வாருங்கள்' என்று கூறினார். " வண்டியின் குறுக்கே ஏன் படுத்தாய்? உனக்கு என்ன வேண்டும்? " என்று அந்த வாலிபரை அருகில் அழைத்துக் கேட்டார்.

அந்த இளைஞரோ, "வாத்யாரே..! இந்த உசுரு ஒனக்குத்தான். நீ ஜெயிக்கணும். இதுக்கு என் உசுரு காணிக்க" என்றவாறு கதறிக் கதறி அழத் தொடங்கினார். எம்ஜிஆரோ அந்த இளைஞரைக் கட்டித் தழுவினார். கண்ணீரைத் துடைத்தார். தன் ஜிப்பாயிலிருந்து பணத்தை எடுத்து, அந்த வாலிபரின் பாக்கெட்டில் திணித்தார்.

" உன் வாக்கு பலிக்கும். நீ ஜெயிப்ப. அதனால நானும் ஜெயிப்பேன்" என்று எம்ஜிஆர் கூறினார். சுற்றிச் சுழன்று நின்றிருந்த தொண்டர்கள் பலத்த கரவொலியும், குரலொலியும் எழுப்பி, அந்த இடத்தையே உணர்ச்சிப் பிழம்பாக்கினர். ஓரியண்டல் தியேட்டரின் சுற்றுச்சுவரில் நின்றபடி, இந்த காட்சிகளை வேடிக்கைப் பார்த்த அடியேனின் நெஞ்சில், இவை அவ்வப்போது நிழலாடிக் கொண்டே இருக்கின்றன.

ஒரு வழியாக எம்ஜிஆரின் வாகனம் அடுத்த பிரச்சார முகாமை நோக்கி நகர்ந்து விட்டது. எம்ஜிஆர் கட்டித் தழுவிய அந்த வாலிபர் திடீர் விஐபி ஆகிவிட்டார். அங்கே சூழ்ந்து இருந்த ஒவ்வொருவரும் வந்து அந்த வாலிபரை கட்டி தழுவ வந்தனர். அவரோ, " இது வாத்தியார் கட்டித் தழுவிய சட்டை. இனிமேல் நான் கும்புட்ற சட்டை " என்றவாறு கைகளை மட்டும் கொடுத்தார். மற்ற தொண்டர்கள் அவரைக் கைகுலுக்கிப் பாராட்டுவதுமாக மகிழ்ச்சிக் குதூகலிப்பில் கொண்டாடினர்.

கிச்சிப்பாளையத்தை வசிப்பிடமாகக் கொண்ட அந்த வாலிபர், எம்ஜிஆர் கட்டிப்பிடித்த போது கசங்கிய சட்டையை, அப்படியே எடுத்துத் தன் குடிசை வீட்டில் காட்சிப் பொருளாக வைத்து விட்டார். தினந்தோறும் அந்த சட்டையைக் கும்பிடுவதையும் அவர் வழக்கமாக்கி வைத்திருந்தார்.

ஆனால் அந்தோ... அடுத்த சில மாதங்களில் பெய்த திடீர் அடைமழையின் காரணமாக, அந்த குடிசையில் மழை வெள்ளமும் குடி புகுந்து, குடிசையே குலைந்து போனது. காலங்கள் கரைந்து போயின. 50 ஆண்டுகளைத் தாண்டிய பிறகும், அந்த நினைவுகளைச் சுமந்த நெஞ்சம் அவ்வப்போது விம்மி தாழ்வது வழக்கமாகிப் போனது.


- ஆர் நூருல்லா செய்தியாளன்,
9655578786

Advertisement