பிரச்னையை சுட்டிக்காட்டுவதோடு தீர்வையும் சொல்கிறது 'தினமலர்'
மலரையும் மணத்தையும் பிரிக்க முடியாது. அதுபோலத்தான் தமிழ் மக்களையும் தினமலரையும் பிரிக்க முடியாது. அந்த அளவுக்கு தமிழக மக்களின் தினசரி வாழ்க்கையில் அங்கம் ஆகிவிட்டது 'தினமலர்'.
பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே நான் தினமலர் வாசகர். அதோடு அன்று வாசிக்கத் தொடங்கிய சிறுவர் மலரை இன்று வரை வாசித்து வருகிறேன்! தினமலரில் அரசியல் முதல் ஆன்மிகம் வரை அனைத்து செய்திகளையும் நான் தினமும் வாசிப்பதுண்டு. தினமலரில் ஒரு செய்தி வெளியாகிறது என்றால் அது 100% உண்மை என்ற நம்பிக்கை, நான் உட்பட எல்லோருக்குமே உண்டு. அதனால் தான், தினமலர் 'உண்மையின் உரைகல்'.
நான் அரசியலில் ஈடுபட, மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஊக்கமாக இருந்தார்கள். அதே போல், தினமலரும் ஒரு வழிகாட்டியாக எனக்கு இருந்தது. அதில் வெளியாகும் அரசியல் செய்திகளை வைத்து, நானும் மேடைகளில் அரசியல் பேச அறிந்துகொண்டேன் என்றால் அது மிகை ஆகாது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வராக இருந்தபோது, குடிமராமத்து, நீராதார சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை பாராட்டி தினமலர் செய்திகள் வெளியிட்டதை மறக்க முடியாது.
தினமலர் வாசித்தால், உள்ளூர் பிரச்சனைகளை தெரிந்து கொள்ள முடியும். நான் அமைச்சராக பதவி வகித்த காலத்தில், தினமலரில் வெளியாகும் குறைகளை, அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி, தீர்வு கண்டு கொடுத்துள்ளேன். அந்த அளவுக்கு மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் தினமலருக்கு பங்கு உண்டு.
வெறுமே பிரச்னைகளை செய்திகளாக வெளியிடாமல்; ஒரு பிரச்னை என்றால் அதற்கு தீர்வையும் சுட்டிக் காட்டுவதில் தினமலருக்கு ஈடு இணை யாரும் இல்லை. அதனால் தான், தினமலர், தமிழக மக்களுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருக்கிறது
நல்ல நண்பர்கள், நாம் தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி திருந்தச் செய்வர். அதுபோல, யார் தவறு செய்தாலும் சுட்டிக் காட்டுவதால் தினமலர் நண்பனாக திகழ்கிறது.
பவள விழா கொண்டாடும் தினமலர் மேலும் பல நூற்றாண்டு விழாக்களை கொண்டாட வாழ்த்துகிறேன்; இறைவனை வேண்டுகிறேன்.
தினமலர் வாசகி,
வி.எம்.ராஜலட்சுமி
முன்னாள் தமிழக அமைச்சர் - அ.தி.மு.க.,