அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு; 19 காளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு

1

மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கருப்பாயூரணி கார்த்தி 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

காணும் பொங்கல் நாளான இன்று, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மதுரை கலெக்டர் பிரவீன் குமார் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டனர்.பல சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் ஒவ்வொரு சுற்றின் போதும் சீறி பாய்ந்த காளைகளை, அதற்கென்று தயாராக காத்திருந்த காளையர்கள் அனாயசமாக பாய்ந்து சென்று பிடித்து அடக்கினர்.

சிறந்த மாடுபிடி வீரராக வென்ற கருப்பாயூரணி கார்த்திக்கு முதல்வர் சார்பாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. இவர் மொத்தம் 19 காளை அடக்கி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார். 2வது இடத்தை பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் என்பவர் பெற்றார். இவர் மொத்தம் 17 காளைகளை அடக்கினார். இவருக்கு பைக் பரிசாக அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த ஏவிஎம் பாபு என்பவரின் காளை சிறந்த காளையாக முதல் பரிசை வென்றது.

Advertisement