இந்துாரில் வெல்லுமா இந்தியா: நியூசிலாந்துடன் மூன்றாவது மோதல்

இந்துார்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் சுப்மன் கில், அனுபவ ரோகித் சர்மா, விராத் கோலி விளாசினால், இந்திய அணி சுலப வெற்றி பெற்று, கோப்பை வெல்லலாம்.


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வி அடைய, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் முக்கியமான மூன்றாவது போட்டி (ஜன.18), இந்துாரின் (ம.பி.,) ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது.

'ரோ-கோ' ஸ்பெஷல்: இந்திய பேட்டிங்கிற்கு 'சீனியர்' ரோகித் சர்மா, கோலி (சுருக்கமாக ரோ-கோ) பலம் சேர்க்கின்றனர். துவக்கத்தில் ரோகித் சற்று தாக்குப்பிடிக்க வேண்டும். கேப்டன் சுப்மன் கில் தொடர்ந்து இரு அரைசதம் அடித்து நல்ல 'பார்மில்' உள்ளார். முதல் போட்டியில் 93 ரன் விளாசிய கோலி, மீண்டும் விஸ்வரூபம் எடுப்பது அவசியம். 'மிடில் ஆர்டரில்' ஷ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை தருகிறார். ரவிந்திர ஜடேஜா சோபிக்க தவறுவது பலவீனம். கடந்த போட்டியில் சதம் அடித்த ராகுல், தனது ரன் வேட்டையை தொடரலாம். நியூசிலாந்து 'ஸ்பின்னர்க'ளான கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல், லெனாக்சை நமது பேட்டர்கள் சுலபமாக சமாளித்தால், தொடரை 2-1 என கைப்பற்றி, கோப்பை வெல்லலாம்.


அர்ஷ்தீப் எதிர்பார்ப்பு: பந்துவீச்சு தான் அச்சுறுத்துகிறது. ஹோல்கர் மைதானத்தில் ரன் மழை பொழியலாம் என்பதால், குல்தீப் யாதவ், ஜடேஜா கட்டுக்கோப்பாக பந்துவீச வேண்டும். நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதில் 'ஆப்-ஸ்பின்னர்' ஆயுஷ் படோனி அறிமுக வாய்ப்பு பெறலாம். பிரசித் கிருஷ்ணாவுக்கு 'ரெஸ்ட்' கொடுத்துவிட்டு அர்ஷ்தீப் சிங்கை சேர்க்கலாம். பந்தை 'ஸ்விங்' செய்வது, துல்லிய 'யார்க்கர்' வீசுவது அர்ஷ்தீப் சிங்கிற்கு சாதகம். அனுபவ சிராஜ், ஹர்ஷித் ராணா அசத்தலாம்.

அசராத மிட்சல்: நியூசிலாந்து அணிக்கு டேரில் மிட்சல் பலம். கடந்த போட்டியில் சதம் விளாசிய இவர், வெற்றிக்கு கைகொடுத்தார். கான்வே, வில் யங், கிளன் பிலிப்ஸ் நம்பிக்கை தருகின்றனர். பந்துவீச்சில் மிரட்ட ஜேமிசன், கிறிஸ்டியன் கிளார்க் உள்ளனர்.

'உலக' பைனல் பதட்டம்
''ஒருநாள் தொடர் 1-1 என உள்ளதால், உலக கோப்பை பைனல் போன்று நெருக்கடியான சூழ்நிலையை உணர்கிறோம். இந்தியாவில் இப்படிப்பட்ட நிலையை சந்திப்பது அரிது. மூன்றாவது போட்டியில் சிறப்பாக செயல்பட நமது வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.


-சிராஜ்
இந்திய அணி பவுலர்



யார் ஆதிக்கம்


இரு அணிகளும் 122 ஒருநாள் போட்டிகளில் மோதின. இந்தியா 63, நியூசிலாந்து 51ல் வென்றன. ஒரு போட்டி 'டை' ஆனது. 7 போட்டிக்கு முடிவு இல்லை.


* மூன்றாவது போட்டி நடக்கும் இந்துார், ஹோல்கர் மைதானம், இந்திய அணியின் அசைக்க முடியாத கோட்டையாக திகழ்கிறது. இங்கு நியூசிலாந்து (2023) உட்பட ஏற்கனவே பங்கேற்ற 7 ஒருநாள் போட்டிகளிலும் வென்றது.

சேவக் 'சரவெடி'


இந்துார், ஹோல்கர் மைதானம் பேட்டர்களின் சொர்க்கபுரி. 'மெகா' ஸ்கோரை எட்டலாம். இங்கு 2011ல் சேவக், 219 ரன் விளாச, இந்தியா (50 ஓவரில் 418/5), வெஸ்ட் இண்டீசை (49.2 ஓவர், 265/10) 153 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதே மைதானத்தில் இந்தியா கடைசியாக பங்கேற்ற இரு போட்டிகளில் 385 (எதிர், நியூசி., 2023), 399 ரன் (எதிர், ஆஸி., 2023) குவித்து, வென்றது.



* இந்துாரில் ஜன. 18ல் மழைக்கு வாய்ப்பு இல்லை.

இது வரலாறு


இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி 1987ல் இருந்து 4 உலக கோப்பை, ஒரு சாம்பியன்ஸ் டிராபி உட்பட 16 முறை ஒருநாள் போட்டியில் பங்கேற்றது. 1989ல் இருந்து 7 முறை இருதரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஒன்றில் கூட கோப்பை வெல்லவில்லை.



* இந்திய அணி சொந்த மண்ணில் இரு தரப்பு ஒருநாள் தொடரை 2019க்கு பின் இழக்கவில்லை. கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 3-2 என (2019, மார்ச்) தோற்றது.



* 2024ல் நியூசிலாந்து அணி, இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை 3-0 என வென்றது. இதே போல ஒருநாள் தொடரையும் முதல் முறையாக கைப்பற்ற காத்திருக்கிறது. தனது பயிற்சியில் இன்னொரு மோசமான சூழ்நிலையை சந்திக்க பயிற்சியாளர் காம்பிர் விரும்ப மாட்டார். 2023, உலக கோப்பையில் 2வது இடம், சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி, இன்று கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

Advertisement