தேர்தல் அறிக்கை  முதல் பட்டியல்! அ.தி.மு.க., பழனிசாமி வெளியிட்டார் 5 அறிவிப்புகள்

36

சென்னை : சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகள் அடங்கிய முதல் பட்டியலை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று சென்னையில் வெளியிட்டார். 'மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய், ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம், இலவச வீடு' உள்ளிட்ட ஐந்து முக்கிய அறிவிப்புகள், அதில் இடம்பெற்றுள்ளன.

அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆரின், 109வது பிறந்த நாளை, அக்கட்சியினர் நேற்று கொண்டாடினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு, பொதுச் செயலர் பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு, பழனிசாமி இனிப்பு வழங்கினார்; 109 கிலோ 'கேக்' வெட்டி, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வழங்கினார். தொண்டர்களுக்கு வேட்டி, புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

அதை தொடர்ந்து, சட்டசபை தேர்தலுக்கான அ.தி.மு.க.,வின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை பழனிசாமி வெளியிட்டார்.

அதன் விபரம்:

குல விளக்கு திட்டம்



சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்க, குல விளக்கு திட்டத்தின் வாயிலாக, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மாதந்தோறும், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இத்தொகை, குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் நகர பஸ்களில் பயணம் செய்யும் ஆண்களுக்கு, கட்டணமில்லா பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நகர பஸ்களில், மகளிருக்கான இலவச பயணத் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.


அம்மா இல்லம் திட்டம்






கிராமங்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, 'அம்மா இல்லம் திட்டம்' வாயிலாக, அரசின் சார்பில் இடம் வாங்கி, 'கான்கிரீட்' வீடுகள் கட்டித் தரப்படும். நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி, அடுக்குமாடி வீடுகள் கட்டி, இலவசமாக வழங்கப்படும்.
ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்களின் மகன்கள் திருமணமாகி, தனிக்குடித்தனம் செல்லும்போது, அரசின் சார்பில் இடம் வாங்கி, கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.


150 நாள் வேலை திட்டம்






நுாறு நாள் வேலை திட்டம், 125 நாட்களாக உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

அம்மா இருசக்கர வாகனம்





மகளிருக்கு 25,000 ரூபாய் மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு, அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர், பழனிசாமி அளித்த பேட்டி:

தி.மு.க., அரசுக்கு திறமையில்லாததால், தமிழகத்தின் கடன் சுமை அதிகமாகியுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், 5 லட்சத்து 18,000 கோடி ரூபாய் தான் கடன் இருந்தது.

அரசுக்கு வரி வருவாய் இல்லாத நேரத்தில் கூட, கொரோனா தொற்று தடுப்புக்கு, 40,000 கோடி ரூபாய் செலவு செய்தோம். நாங்கள் திறமையாகக் கையாண்டு, நிதிச் சுமையை குறைத்தோம்.


ரூ.5.5 லட்சம் கோடி கடன்







தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், 'நிதி மேலாண்மை செய்ய, நிபுணர் குழு அமைத்து, கடன் குறைக்கப்படும்; வருவாய் உயர்த்தப்படும்' என்றனர்.
அதற்கு நேர்மாறாக கடன் தான் அதிகரித்துள்ளது. தி.மு.க., ஆட்சிக் காலத்தில் மட்டும், 5.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணத் திட்டத்தால், போக்குவரத்து துறை நெருக்கடிக்கு ஆளாகாது. நிர்வாகத் திறமை இருந்தால், எல்லாவற்றையும் சமாளிக்கலாம்.

இரண்டாம் கட்ட தேர்தல் அறிக்கையை முழுமையாக வெளியிடும்போது, தாலிக்கு தங்கம் திட்டம் உட்பட பல அறிவிப்புகள் வெளியிடப்படும்.

எங்களுடைய தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, ஒவ்வொரு மண்டலமாக சென்று, மக்களிடம் மனு வாங்கிக் கொண்டு இருக்கிறது. இன்னும் கோவை மண்டலத்துக்கு செல்லவில்லை.


மக்கள் என்னென்ன நினைக்கின்றனரோ, அவையெல்லாம் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். தேசிய ஜனநாயக கூட்டணியில், மேலும் பல கட்சிகள் இணையும். எங்கள் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


@block_B@ இனிப்பான செய்தி என்னாச்சு? அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட குழு, தமிழகம் முழுதும் பயணம் செய்து, கட்சியினர், பொது மக்களிடம் ஆலோசனைகளை கேட்டு வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் முன்பே, அவசர அவசரமாக மகளிருக்கு 2,000 ரூபாய் போன்ற முக்கிய வாக்குறுதிகளை பழனிசாமி அறிவித்துள்ளார். வரும் 20ம் தேதி துவங்கும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசும்போது, மகளிர் உதவித் தொகையை, 1,000த்திலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்துவது, அனைத்து நகர பஸ்களிலும் ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் போன்ற அறிவிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட இருப்பதாக கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்துவது போல, கடந்த 11ம் தேதி, திண்டுக்கல்லில் நடந்த பொங்கல் விழாவில் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, 'விரைவில் பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும்; பொங்கலை ஒட்டி முதல்வர் அறிவிப்பார்' என்றார். மகளிர் உதவித்தொகை 1,500 ரூபாயாக உயரப் போகிறது என்பதை தான், இனிப்பான செய்தி என அமைச்சர் கூறியதாக, சமூக வலைதளங்களில் தி.மு.க.,வினர் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தான், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி திடீர் அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார். மகளிர் உதவித் தொகையை, தி.மு.க., அரசு 1,500 ரூபாயாக உயர்த்த இருப்பதை அறிந்து தான், 2,000 ரூபாய் வழங்கப்படும் என பழனிசாமி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத தி.மு.க., தலைமை, மகளிர் உதவித் தொகையை இப்போதே 1,500 ரூபாயாக அதிகரிப்பதா அல்லது 2,000 ரூபாயாக அதிகரிப்பதா அல்லது ஆட்சிக்கு வந்தால், 2,500 ரூபாய் தருவோம் என வாக்குறுதி அளிப்பதா என்ற ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.block_B

Advertisement