எல்லைப்பாதுகாப்பில் முன்பைவிட இந்தியாவுக்கு கூடுதல் பலம்; ராஜ்நாத் சிங்

நாக்பூர்: எல்லைப் பாதுகாப்பு, ஆயுதங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி போன்றவற்றில் இந்தியா முன்பைவிட கூடுதல் பலத்துடன் இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் நாக்பூரில் வெடிமருந்து உற்பத்தி மையத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது; சுய சார்பு இந்தியாவை உருவாக்குவதில் மத்திய அரசு மிகவும் உறுதியாக உள்ளது. 2047க்குள் அனைத்து துறைகளில் இந்தியா சார்பு அடைய வேண்டும் என்று முடிவு செய்து பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார்.

நாங்கள் தொடர்ந்து சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளின் முயற்சிகளும், கொள்கைகளையும், நோக்கங்களையும் களத்தில் செயலாக மாற்றுவதற்கான உந்துதலுமே, தற்போது பலன்களை அளிக்கின்றன.

பாதுகாப்புத்துறையை சுயசார்பு கொண்டதாக மாற்ற விரும்புகிறோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு, பாதுகாப்புத்துறை உற்பத்தி என்பது பெரும்பாலும் பொதுத்துறை நிறுவனங்களிடம் மட்டுமே இருந்தன. தற்போது இருக்கும் தனியார் துறையின் பங்களிப்பு என்பது அப்போது கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

ஆப்பரேஷன் சிந்தூர் சுமார் 88 மணி நேரம் நீடித்தது. இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இது போன்ற நடவடிக்கைகளில் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு முடிவும் மிக முக்கியமானது. இன்று உலகில் பல்வேறு வகையான போர்களைக் பார்க்கிறோம். போர் என்பது நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இத்தகையச் சூழலில், போர்களுக்கான ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.

மறுபுறம், போரின் தன்மை இன்று வேகமாக மாறிவருவது தெளிவாகத் தெரிகிறது. எரிசக்தி, வர்த்தகம், சுங்கவரி, தொழில்நுட்பம் மற்றும் தகவல் போன்ற துறைகள் இப்போது போரின் புதிய பரிமாணங்களாக மாறியுள்ளன. இப்படிபட்ட சூழலில், நமது எல்லைப் பாதுகாப்பு, ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தித் தளவாடங்களின் முக்கியத்துவம் என எதுவும் குறைந்துபோகவில்லை. அனைத்தும் முன்பை விட பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement