திரிணமுல் காங்கிரசின் காட்டாட்சிக்கு முடிவு: பிரதமர் மோடி

6

சிலிகுரி: பீஹாரில் நடந்த காட்டாட்சிக்கு பாஜவும், தேஜ கூட்டணியும் முடிவு கட்டியது. தற்போது திரிணமுல் காங்கிரசின் மகா காட்டாட்சிக்கு முடிவுகட்ட மேற்கு வங்கம் தயாராகிவிட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.




மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

அன்பு




இந்தியா கேட் முன்பு, நேதாஜி சிலையை பாஜ அரசு தான் நிறுவியது. அந்தமான் நிக்கோபரில் உள்ள ஒரு தீவுக்கு நேதாஜி பெயர் சூட்டப்பட்டுள்ளது. மத்தியில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு தான் வங்க மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. துர்கா பூஜைக்கு யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து கிடைக்க பாஜ அரசின் தொடர் முயற்சிகள் தான் காரணம். சோனியா ஆட்சியில் இவர்கள் கூட்டணியில் இருந்தனர். ஆனால், அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. மேற்கு வங்கம் மீது ஏராளமான அன்பை வைத்துள்ளேன்.


ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரை தேசிய அளவில் பாஜ அரசு தான் கொண்டாடியது. வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் பாஜ அரசு செயல்படுகிறது.

மக்கள் பாதிப்பு



மத்திய அரசின் திட்டங்களை திரிணமுல் காங்கிரஸ் அரசு தடுக்கிறது. மோடி மற்றும் பாஜ உடன் அவர்களுக்கு பிரச்னை உள்ளது. ஆனால், அவர்கள் மக்களை பாதிக்க வைக்கின்றனர். மீனவர்களுக்காக மத்திய பாஜ அரசு டிஜிட்டல் தளத்தை உருவாக்கியது. ஆனால், இதற்கு திரிணமுல் காங்கிரஸ் அரசு ஒத்துழைக்க மறுக்கிறது, இதனால், மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள் மீனவர்களை சென்றடையவில்லை. குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்கும் அரசு நீக்கப்பட வேண்டுமா வேண்டாமா? மேற்கு வங்கம் காப்பற்றப்பட வேண்டாமா? என மக்கள் சொல்ல வேண்டும்.

இரட்டை இன்ஜின் அரசு



நாட்டில் வளர்ச்சியைத் தடுத்து ஏழைகளுக்கான நலத்திட்ட பணிகளை தடுக்கும் எந்தவொரும் அரசும் தண்டிக்கப்பட வேண்டும். மக்கள் இப்போது விழித்து கொண்டுள்ளனர். திரிணமுல் காங்கிரசின் கொடூரமான அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் முடிவு செய்துவிட்டனர். இங்கு இரட்டை இன்ஜின் அரசு மாநிலத்தில் அமைய வேண்டும்.



பீஹாரில் நடந்த காட்டாட்சிக்கு பாஜவும், தேஜ கூட்டணியும் முடிவு கட்டியது. தற்போது திரிணமுல் காங்கிரசின் மகா காட்டாட்சிக்கு முடிவுகட்ட மேற்கு வங்கம் தயாராகிவிட்டது மாற்றம் என்பது இன்றியமையாதது. பாஜ அரசு தேவைப்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement