டிரம்ப்புக்கு எதிர்ப்பு: அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தியது ஐரோப்பிய யூனியன்

10


வாஷிங்டன்: கிரீன்லாந்தை கையகபடுத்துவது தொடர்பாக அதிபர் டிரம்ப் மிரட்டி வரும் நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தி வைத்துள்ளது.


ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ளது, உலகின் மிகப் பெரிய தீவு நாடான கிரீன்லாந்து. ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ஒரு பகுதியாக இது இருந்தாலும், தன்னாட்சி அதிகாரம் பெற்றது. அதிக நிலப்பரப்பும் கனிம வளமும் கொண்ட கிரீன்லாந்தை, கையகப்படுத்த திட்டமிட்டு, அச்சுறுத்தும் தொனியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசி வருகிறார்.


ஆர்டிக் பகுதியில், ரஷ்யா, சீனா ஆகியவற்றின் ஆதிக்கத்தை தடுக்க, கிரீன்லாந்து தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது அவரது வாதம். எப்படியாவது, அந்த நாட்டை தங்கள் வசம் கொண்டு வந்தே தீருவோம் என்றும் அவர் கூறி வருகிறார்.

இதற்கு, அமெரிக்காவின் நேட்டோ கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகள் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன. கிரீன்லாந்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஐரோப்பிய நாடுகள், தங்கள் படைகளையும் அனுப்பி வைத்துள்ளன. இது, டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.


கிரீன்லாந்து விவகாரத்தில், அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், தாங்கள் படைகளை அனுப்பியது, கிரீன்லாந்தின் பாதுகாப்பை பலப்படுத்தவே என்றும், அமெரிக்காவிற்கு எதிராக அனுப்பவில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், டிரம்ப் மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்கா உடன் போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பது என ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வென் டெர் லேயன் இடையே இந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.


டிரம்ப் மிரட்டல் விடுப்பதால், இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு இருந்தாலும், இனிமேல் அடுத்த கட்ட நடவடிக்கை ஏதும் இருக்காது என ஐரோப்பிய மக்கள் கட்சித் தலைவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் முடிவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஐரோப்பிய யூனியன் தலைவரும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement