வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் தமிழகம்: கவர்னர் ரவி

21

சென்னை: '' தமிழகம் வளர்ச்சியை எட்டாமல் பின்தங்கிய நிலையில் உள்ளது,'' என கவர்னர் ரவி கூறியுள்ளார்.


சென்னையில் நடந்த 'பாரதத்துக்கான தொழில்நுட்பம் 2026' மாநாட்டில் கவர்னர் ரவி பேசியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் 2 லட்சம் பொறியாளர்கள் உருவாகின்றனர். உயர்கல்வியில் ஏராளமானோர் சேர்வதுடன், அதிகமான காப்புரிமை தமிழகத்தில் இருந்து பதிவு செய்யப்படுகிறது. இதனால், தொழில்நுட்பம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளின் தலைநகராக உருவெடுப்பதற்கான ஆற்றல் தமிழகத்துக்கு உண்டு. இவ்வளவு புள்ளி விவரங்கள் இருந்தும், அது முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்த தவறி விட்டது.


தொழில்நிறுவனங்கள் வெளிப்படையான மற்றும் மறைமுகமான செலவுகள் காரணமாக மற்ற மாநிலங்களுக்கு செல்கின்றன. தொழில்முனைவோர் தங்களது திட்டங்கள், யோசனைகளை தமிழகத்தில் உருவாக்கினாலும் அவற்றை விரிவுபடுத்துவதற்கு மற்ற மாநிலங்களுக்கு செல்கின்றனர். மாநிலத்தில் உள்ள மற்ற நிறுவனங்களும், இங்கேயே விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டாத நிலை காணப்படுகிறது. இதனால், மாநிலம் வளர்ச்சியை எட்டாமல் பின்தங்கிய நிலையில் உள்ளது.

அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வித்தரத்தில் வேறுபாடு உள்ளது. இதனை களைய மாநில அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

Advertisement