கண்முன்னே அரை மணி நேரத்தில் உருவாகும் விவசாய உபகரணங்கள்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் இரும்பு பட்டையை கொடுத்த அரை மணி நேரத்திலேயே விவசாய உபகரணங்களாக மாற்றி தரும் வடமாநில தொழிலாளர்களால் வரவேற்பு பெற்றுள்ளது.

விவசாய தொழிலுக்கு ஆதாரமான இரும்பாலான உபகரணங்கள் செய்ய கொல்லன் பட்டறைகள் இயங்கி வந்தன. காலப்போக்கில் இவை வழக்கொழிந்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து குடும்பத்துடன் சாலையோரம் முகாமிட்டு விலை குறைவாகவும், தரமானதாகவும் தயாரிப்பதால் விவசாயிகள் இடையே தனி மவுசு ஏற்பட்டுள்ளது.

ராஜபாளையம் மாரியம்மன் கோயில் முன்பு இரும்பு பட்டறை தொழிலை பரம்பரையாக செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் கொட்டகை அமைத்து சூடேற்றப்பட்ட இரும்பு பட்டையின் தன்மை விலகியவுடன் சம்மட்டியால் அடித்து அதற்கு லாவகமாக வடிவம் கொடுக்கின்றனர்.

இதில் உருவான அரிவாள், கொரட்டி, கோடாரி, கத்தி, களை வெட்டும் கத்தி, காய்களை வெட்டும் அரிவாள்மனை உள்ளிட்டவற்றை வெளிப்படையாக அரை மணி நேரத்தில் கண் முன்னே செய்யப்படுவதால் அந்த வழியாக செல்வோர் வாகனங்களை நிறுத்தி வாங்கிச் செல்கின்றனர். ரூ.100 முதல் 500 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த நாங்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று விவசாய தேவைக்கேற்ப இரும்பு கருவிகளை வெட்ட வெளியில் தயாரித்து விற்கிறோம். கண் முன்னே தாங்கள் கொண்டு வந்த இரும்பு பட்டை உபகரணமாக மாறுவதை ஆர்வத்துடன் பலரும் வேடிக்கை பார்க்கின்றனர். பாரம்பரியமாக இந்த தொழிலை விடாமல் மக்களுக்கு பயனுள்ள கருவிகளை குறைந்த விலையில் வழங்கி வருகிறோம் என்றனர்.

Advertisement