டில்லி புறப்பட்டார் விஜய்; சிபிஐ முன்பு நாளை 2வது முறையாக ஆஜராகிறார்

33

சென்னை; கரூர் துயரம் தொடர்பாக 2ம் கட்ட சிபிஐ விசாரணை நாளை நடக்க உள்ளது. இந்த விசாரணைக்காக தவெக தலைவரும், நடிகருமான விஜய் இன்று சென்னையில் இருந்து டில்லி புறப்பட்டார்.

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொது செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் ஆஜராகி விசாரணையை எதிர்கொண்டனர். சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தனர்.

விஜய் பயணித்த பிரசார பஸ்சையும், கரூர் விசாரணை அலுவலகத்திற்கு கொண்டு வந்த அதிகாரிகள், அதன் உள்ளேயும், வெளியேயும் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, தவெக தலைவர் விஜய்யை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது.

அதை ஏற்று தொடர்ந்து ஜன.12ம் தேதி விஜய் டில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் பலமணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் தரப்பு திட்டமிட்டு இருந்த தருணத்தில் பொங்கல் விடுமுறையை காரணம் காட்டி, அடுத்த நாட்களில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விஜய் விலக்கு கேட்டு இருந்தார்.

இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் ஜன.19ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூற, டில்லியில் இருந்து விஜய் சென்னை திரும்பினார். தற்போது பொங்கல் விடுமுறை முடிந்து விட்ட படியால், சிபிஐயின் 2ம் கட்ட விசாரணைக்காக அவர் இன்று (ஜனவரி 18) மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார்.

அங்குள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கும் விஜய், நாளைய தினம் சிபிஐ விசாரணையை எதிர்கொள்கிறார். நாளைய முழு விசாரணைக்கு பின்னரே, அவரிடம் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படுமா? என்பது தெரிய வரும்.

Advertisement