இந்தியாவே எனது வீடு, ஆசிரியர்; நாட்டுக்கு நான் கடமைப்பட்டவன் என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

31


சென்னை: '' இந்தியனாக இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். இந்தியா எனது உத்வேகம். எனது ஆசிரியர் மற்றும் எனது வீடு,'' என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.


பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில்,''கடந்த 8 ஆண்டுகளாக, ஹிந்தி சினிமாவில் இருந்து எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. சினிமாத்துறை சமூகம் சார்பானதாக மாறிவிட்டது. இசைத்துறையின் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்களே அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியுடன் இருக்கின்றனர். இது சமூகம் தொடர்பானதாகவும் இருக்கலாம்'' எனவும் தெரிவித்து இருந்தார். இந்த கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்ட திரைப் பிரபலங்களே ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சிக்க துவங்கினர்.


இந்நிலையில் சர்ச்சையான தனது கருத்து குறித்து விளக்கம் தெரிவித்து ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.


அதில் அவர் கூறியதாவது: ஒரு கலாசாரத்தை இணைப்பதற்கும், கொண்டாடுவதற்கும், கவுரவிப்பதற்கும் எப்போதும் எனது வழியாக, இசை இருந்து வருகிறது. இந்தியா எனது உத்வேகம். எனது ஆசிரியர் மற்றும் எனது வீடு.சில நேரங்களில் நமது நோக்கங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், எப்போதும் இசையின் மூலம் கவுரவித்தல் மற்றும் சேவை செய்வதே எனது நோக்கம் ஆகும்.

நான் ஒரு போதும், யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை. எனது நேர்மை உணரப்படும் என்று நம்புகிறேன். இந்தியனாக இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். இது, கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கும் மற்றும் பன்முக கலாசார குரல்களை கொண்டாடும் ஒரு இடத்தை உருவாக்க எனக்கு உதவுகிறது. இசை வாழ்க்கையின் ஒவ்வொரு பயணமும் எனது இலக்கை நிறைவேற்ற உதவுகிறது. இந்த நாட்டிற்கு நான் கடமைப்பட்டு இருப்பேன்.


கடந்த காலத்தை மதிக்கும், நிகழ்காலத்தைக் கொண்டாடும் மற்றும் எதிர்காலத்தை ஊக்குவிக்கும் இசைக்கு உறுதியளிக்கிறேன். ஜெய் ஹிந்த் மற்றும் ஜெய் பாரத், இவ்வாறு அந்த வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

Advertisement