பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் யுஏஇ அதிபர்
புதுடில்லி: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஐக்கிய அரபு எமிரேட்சின்( யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யான் நாளை இந்தியா வர உள்ளார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல்நஹ்யான் நாளை (ஜனவரி 19) இந்தியா வருகிறார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்த பயணத்தை மேற்கொள்கிறாார். அதிபரான பிறகு அவர் இந்தியா வருவது இது3வது முறையாகும்.
கடந்த 2024 செப்டம்பரில் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சவீத் அல் நஹ்யான் இந்தியா வந்தார். அவரைத் தொடர்ந்து 2025 ஏப்ரல் மாதம் யுஏஇ துணைப்பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் இந்தியா வந்தார். இவர்கள் வருகையால் உருவாக்கப்பட்ட வலுவான உறவின் அடிப்படையில் யுஏஇ அதிபரின் தற்போதைய பயணம் அமைகிறது.
இந்தியாவும், யுஏஇயும் வலுவான பொருளாதார உறவுகளை கொண்டுள்ளன. நெருக்கமான மற்றும் பன்முக உறவுகளை பகிர்ந்து கொள்கின்றன. இரு தரப்பு முதலீடு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் இருநாடுகளும் வலுப்படுத்தப்பட்ட சிறந்த வர்த்தக மற்றும் முதலீட்டு கூட்டாளியாக விளங்குவதுடன், வலுவான எரிசக்தி உறவைக் கொண்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.