உ.பி., மகர மேளா: 3.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்

1

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில், மகர மேளா நடந்து வரும் சூழலில், தை அ மாவாசையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில், 3.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.


உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், மகர மேளா நடந்து வருகிறது. தை அமாவாசையான நேற்று, முக்கிய நிகழ்வான புனித நீராடல் விழா வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி, நாடு முழுதும் இருந்து அதிகாலை முதலே திரளான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்தனர்.


மதியம் 12:00 மணிவரை, நேற்று ஒரே நாளில் 3.5 கோடி பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி தங்களது முன்னோர்களை வழிபட்டு, தர்ப்பணம் கொடுத்தனர். மகர மேளாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக, 1970 ஏக்கர் பரப்பளவில் தற்காலிக குடில்கள், 25,000 கழிப்பறைகள் நிறுவப்பட்டன.


மேலும், பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்த, 10,000 போலீசார் குவிக்கப்பட்டனர். இது தவிர, நதிக்கரைகளில் பக்தர்கள் சிரமமின்றி புனித நீராட, 12,100 அடி துாரத்திற்கு படித்துறையும் அமைக்கப்பட்டன.
Latest Tamil News
இதற்கிடையே, பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தலின்படி, பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் துாவப்பட்டன. முன்னதாக மகரசங்கராந்தி தினத்தன்று, 1.03 கோடி பக்தர்கள் மகர மேளாவில் பங்கேற்று புனித நீராடினர்.

Advertisement