ஹாக்கி இந்தியா லீக்: பெங்கால் அணி வெற்றி
புவனேஸ்வர்: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் பெங்கால் அணி 3-2 என, டில்லியை வீழ்த்தியது.
புவனேஸ்வர், ராஞ்சி, சென்னையில், ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) 7வது சீசன் நடக்கிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த லீக் போட்டியில் டில்லி, பெங்கால் அணிகள் மோதின.
தில்ராஜ் சிங் (5வது நிமிடம்), டோமஸ் டோமென் (31வது) கைகொடுக்க, ஒருகட்டத்தில் டில்லி அணி 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. பின் எழுச்சி கண்ட பெங்கால் அணிக்கு ஜக்ராஜ் சிங் (45வது நிமிடம்), அபிஷேக் (45), அபான் யூசுப் (48வது) நம்பிக்கை தந்தனர். ஆட்டநேர முடிவில் பெங்கால் அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதுவரை விளையாடிய 7 போட்டியில், 3 வெற்றி, 4 தோல்வி என, 9 புள்ளிகளுடன் பெங்கால் அணி 4வது இடத்துக்கு முன்னேறியது. நான்காவது தோல்வியை பெற்ற டில்லி அணி (4 புள்ளி) 8வது இடத்தில் நீடிக்கிறது.
மற்றொரு லீக் போட்டியில் கலிங்கா, தமிழகம் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என சமநிலையில் இருந்தது. பின் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய கலிங்கா அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கலிங்கா அணிக்கு 2, தமிழகத்துக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது.