ஊடகங்களை ஒடுக்கும் ஆம் ஆத்மி அரசு; பஞ்சாப் கவர்னரிடம் பா.ஜ., புகார்

சண்டிகர்: ஆம் ஆத்மி அரசு ஊடக நிறுவனங்களை குறிவைத்து ஒடுக்குகிறது என, பஞ்சாப் மாநில பா.ஜ., பிரதிநிதிகள், கவர்னர் குலாப் சந்த் கட்டாரியாவிடம் புகார் தெரிவித்துள்ளனர்.


பஞ்சாப் மாநில பா.ஜ., தலைவர் சுபாஷ் சர்மா தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கேவல் சிங் தில்லான், பதேஜங் சிங் பாஜ்வா, ஜக்மோகன் சிங் ராஜு, வினீத் ஜோஷி ஆகியோர், பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியாவை சண்டிகரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பா.ஜ., கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:


பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து, டி.ஜி.பி., கவுரவ் யாதவை அழைத்து கேட்டறிய வேண்டும். பஞ்சாபில் மக்கள் பாதுகாப்பு இன்றி அச்சத்துடன் வாழ்கின்றனர்.
ஆனால், ஆம் ஆத்மி அரசு மாநிலத்தில் நிலவும் அபாயகரமான சட்டம் - ஒழுங்கு நிலையை பற்றி செய்திகள் வெளியிடும் ஊடகங்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பாரம்பரிய வரலாற்றுப் பின்னணி கொண்ட 'பஞ்சாப் கேசரி' குழுமம் உட்பட ஊடக நிறுவனங்களை குறிவைத்து நசுக்குகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பஞ்சாப் கேசரி செய்தி நிறுவனம் உறுதியாக நின்றதுடன், உண்மைகளை வெளியிட்டது.
எனவே, ஊடக நிறுவனங்கள் மீதான ஒடுக்குமுறைகளை கைவிட்டு, ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


கவர்னரை சந்தித்த பின், சுபாஷ் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:
ஆம் ஆத்மி அரசு ஊடகங்களை ஒடுக்குவதை எடுத்துக்காட்டிய சில, 'யு-டியூபர்கள்' மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்த நியாயமான செய்தி வெளியானதை தொடர்ந்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் பஞ்சாப் கேசரி செய்தி நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனை பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, பஞ்சாப் கேசரி குழுமம், முதல்வர் பகவந்த் மானுக்கு கடிதம் அனுப்பியது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பஞ்சாப் அரசு மறுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement