குடிநீர் முறையாக வழங்க கோரி கம்பாலபட்டி மக்கள் மறியல்

ஆனைமலை: ஆனைமலை அருகே, குடிநீர் முறையாக வினியோகம் செய்வதில்லை எனக்கூறி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி அருகே, கம்பாலபட்டி ஊராட்சி பகுதி மக்கள், காலி குடங்களுடன் நேற்று ஆனைமலை - உடுமலை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

கம்பாலபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், ஐந்து ஊராட்சிகள், இரண்டு பேரூராட்சிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.அதில், எஸ்.நல்லுார், கரியாஞ்செட்டிபாளையம், பில்சின்னாம்பாளையம், கோட்டூர், சமத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுகிறது. கம்பாலபட்டிக்கு கடந்த, மூன்று மாதமாக குடிநீர் முறையாக வழங்கவில்லை.

இது குறித்து ஊராட்சியிடம் புகார் அளித்தும் பலன் இல்லை. குடிநீர் முறையாக வழங்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம்.

இவ்வாறு, கூறினர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆழியாறு போலீசார், ஆனைமலை ஒன்றிய அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மக்களிடம் பேச்சு நடத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, குடிநீர் முறையாக வழங்குவதாக உறுதியளித்தனர். அதிகாரிகள் உறுதியால், சமரசம் அடைந்த பொதுமக்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement