ஆந்திராவில் லாரி மீது மோதிய பஸ் தீப்பிடித்து எரிந்து நாசம்; 3 பேர் உடல் கருகி பலி

1

அமராவதி: ஆந்திராவில் கன்டெய்னர் லாரி மீது பஸ் மோதியதில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

36 பயணிகளுடன் தனியார் டிராவல் பஸ் ஒன்று நெல்லூரில் இருந்து ஹைதராபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 2 மணியளவில் நந்தியால் மாவட்டம் ஸ்ரீவெல்லமெட்டா கிராமம் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது, திடீரென டயர் வெடித்தது.

இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை தடுப்புச்சுவரை கடந்து, எதிரே வந்த கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், பஸ்ஸில் தீப்பற்றியது. கொளுந்து விட்டு எரிந்த இந்த தீவிபத்தில் பஸ் மற்றும் லாரி ஓட்டுநர்கள் இருவரும், பஸ் கிளீனரும் என 3 பேர் உயிரிழந்தனர். பஸ்ஸில் இருந்த 36 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது; தீப்பற்றியதும் பஸ்ஸின் இரு கதவுகள் மற்றும் அவசரவழி கதவும் திறக்க முடியாமல் போனது. இதனால், பயணிகள் வெளியேற முடியாமல் பீதியடைந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற மினி லாரி ஓட்டுநர் இதனை கவனித்து, பஸ்ஸின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளார். இதனைப் பயன்படுத்தி பயணிகள் வெளியேறி உயிர்தப்பினர். பஸ் மற்றும் லாரி ஓட்டுநர்களும், பஸ் கிளினரும் இந்த விபத்தில் உடல் கருகி உயிரிழந்தனர். இவ்வாறு கூறினர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement