அது எங்களுடைய வேலையல்ல... கிரீன்லாந்து விவகாரம் குறித்து புடின் கருத்து

9

மாஸ்கோ: கிரீன்லாந்து விவகாரம் எந்தவிதத்திலும் தங்களை பாதிக்காது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்காக டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பல்வேறு வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நெருக்கடி கொடுத்து வருகிறார். அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து தேவை என்று கூறி அவர் பிடிவாதமாக இருக்கிறார். கிரீன்லாந்தை வாங்கும் திட்டத்தை எதிர்த்தால், பிரிட்டன் உள்பட 8 நாடுகளுக்கு பிப்ரவரி 1 முதல் 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும், ஜூன் மாதத்தில் இருந்து இது 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்று மிரட்டல் விடுத்திருந்தார். பின்னர், அந்த முடிவை வாபஸ் பெற்றார்.

கிரீன்லாந்து தீவை வாங்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் திட்டம், நேட்டோ அமைப்பின் ஒற்றுமையையும் குலைத்துள்ளது. இந்த நிலையில், கிரீன்லாந்து விவகாரத்தைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (ஜனவரி 21) நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய புடின் கூறியதாவது; கிரீன்லாந்திற்கு என்ன நடக்கிறது என்பதை கவனிப்பது எங்களின் வேலையல்ல. கிரீன்லாந்து மீது மிகவும் கடுமையான, கொடூரமான அணுகுமுறையையே டென்மார்க் கையாண்டு வந்துள்ளது. இந்த விவகாரம் நிச்சயமாக எங்களைப் பாதிக்காது. அவர்கள் தங்களுக்குள் இதனைத் தீர்த்துக் கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்.

1917ம் ஆண்டு டென்மார்க் தனது கட்டுப்பாட்டில் இருந்த விர்ஜின் தீவை அமெரிக்காவுக்கு விற்றது. முன்பு, 1867ம் ஆண்டு ரஷ்யா தனது வசம் இருந்த அலாஸ்கா பகுதியை ரூ.65 கோடிக்கு அமெரிக்காவுக்கு கொடுத்தது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement