சீதோஷ்ண நிலை மாற்றத்தால் துளிர்விடும் தேயிலை செடிகள்

வால்பாறை: வால்பாறையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், தேயிலை செடிகள் துளிர்விட்டு பசுமையாக காட்சியளிக்கின்றன.

வால்பாறையில், 25 ஆயிரம் ெஹக்டேர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர, சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு போன்றவையும் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் தேயிலை துாள் கோவை, கொச்சி, குன்னுார் ஏல மையத்திற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையால் தேயிலை செடிகள் துளிர்விட முடியாத நிலையில் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இதனால் தற்காலிக தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை விடைபெற்ற நிலையில் பகல் நேரத்தில் வெயிலும், காலை, மாலை நேரத்தில் பனிப்பொழிவும் நிலவுகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளதால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

பருவமழைக்கு பின் வெயில் நிலவுவதால் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளன. பனிப்பொழிவால் சில எஸ்டேட்களில் தேயிலை செடிகள் கருகினாலும், பரவலாக தேயிலை செடிகள் துளிர்விடத்துவங்கியுள்ளன.

வரும் மே மாதம் வரை தேயிலை உற்பத்தி அதிக அளவில் இருக்கும். தேயிலை செடிகளை தாக்கும் கொசுக்களை ஒழிக்க அவ்வப்போது பூச்சி மருந்தும் தெளிக்கப்படுகிறது.

இவ்வாறு, கூறினர்.

Advertisement