தமிழக சட்டசபை கூட்டத்தொடர்; உரையை வாசிக்காமல் வெளியேறினார் கவர்னர்

81

சென்னை: பரபரப்பான சூழலில், புத்தாண்டில் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 20) காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. சட்டசபை கூடியதும் தேசிய கீதம் பாடாததால் கவர்னர் ரவி உரையை படிக்காமல் புறப்பட்டு சென்றார். ஆளும் திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம், கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கும். கவர்னர் உரையில், அரசின் கொள்கைகள், அரசு செயல்படுத்திய திட்டங்கள், புதிய அறிவிப்புகள் போன்றவை இடம் பெறும். கவர்னர் பேச வேண்டிய உரையை, தமிழக அரசு தயாரித்து கவர்னருக்கு அனுப்பி வைக்கும்.


அதை, சட்டசபையில் கவர்னர் ஆங்கிலத்தில் வாசிப்பார். அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். அத்துடன் அன்றைய சபை நடவடிக்கை நிறைவு பெறும். மறுநாளில் இருந்து, கவர்னர் உரை மீது விவாதம் நடத்தப்பட்டு, கவர்னர் உரைக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.


கூட்டத்தொடர்




கடந்த சில ஆண்டுகளாக, கவர்னர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இதன் காரணமாக, என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மத்தியில் நிலவும் சூழ்நிலையில், இன்று (ஜனவரி 20) காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டத் தொடர் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. சட்டசபை கூடியதும் தேசிய கீதம் பாடாததால் கவர்னர் ரவி உரையை படிக்காமல் புறப்பட்டு சென்றார். ஆளும் திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


முன்னதாக, சட்டசபை வளாகத்திற்கு வந்த கவர்னர் ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். அவருக்கு சால்வை அணிவித்தார். பூங்கொத்து கொடுத்து அப்பாவு வரவேற்றார். பேண்ட் வாத்தியம் இசைத்து அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்தாண்டில் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கடந்த கால….!




* கடந்த 2024ம் ஆண்டு, தமிழக அரசு தயாரித்து வழங்கிய உரையில் இடம் பெற்றிருந்த, 'சமூக நீதி, சுய மரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, அமைதி பூங்கா' உள்ளிட்ட அலங்கார வார்த்தைகளை, கவர்னர் தவிர்த்து விட்டார். இது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு தயாரித்த உரை மட்டுமே, சபை குறிப்பில் இடம் பெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், இந்த தீர்மானத்தை முன் மொழிந்தார். இதையடுத்து, சபை நிகழ்வு முடிவதற்கு முன், சபையிலிருந்து கவர்னர் ரவி வெளியேறினார்.
* கடந்த ஆண்டு, உரை நிகழ்த்த சட்டசபைக்கு கவர்னர் வந்தார். தன் உரைக்கு முன், தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கவர்னர் வலியுறுத்தினார். ஆனால், சட்டசபை மரபுப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தேசிய கீதம் இசைக்கப்படாததை கண்டித்து, சபையில் இருந்து கவர்னர் ரவி வெளியேறினார். இதையடுத்து, கவர்னர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.


* இந்த சூழலில் இந்தாண்டும் தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் கவர்னர் ரவி சட்டசபையில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

Advertisement