ரூ.366 கோடி சட்ட விரோத பணப் பரிமாற்றம்; அமைச்சர் நேரு மீது அமலாக்கத்துறை மூன்றாவது குற்றச்சாட்டு

26


சென்னை: அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட மாறுதலுக்காக, ரூ.366 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளது என்று, அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதற்கான ஆதாரங்களுடன் தமிழக போலீஸ் டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.


அமைச்சர் நேரு பொறுப்பு வகிக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் நடந்திருப்பதாக, ஏற்கனவே இரண்டு முறை அமலாக்கத்துறை, தமிழக போலீஸ் டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது. ஒப்பந்தங்களை முடிவு செய்வதில் ரூ.1020 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை, அதற்கான ஆதாரங்களை கடிதம் மூலம் டிஜிபிக்கு அனுப்பியது.
அதற்கு முன், பணி நியமனம் செய்வதில், ஒருவருக்கு தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி, வாட்ஸ்அப் உரையாடல் ஆதாரங்களுடன் ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்தது.
இந்த இரு கடிதங்கள் மீது உரிய வழக்கு பதிந்து தங்களுக்கு தெரிவிக்கும்படி அமலாக்கத்துறை கூறியிருந்தது. எனினும், பூர்வாங்க விசாரணையை மட்டுமே தொடங்கியுள்ள தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்னும் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் உள்ளனர்.


இந்நிலையில் அடுத்த ஊழல் தொடர்பாக, ஜன.,14ல் மூன்றாவது கடிதத்தை அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பொறியாளர்கள் பணியிட மாறுதலுக்கு குறைந்தபட்சம் 7 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது.


* அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமானவர்கள் போனில் இருந்து அத்தகைய 340 பேருடைய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

* 10 முதல் 15 குறிப்பிட்ட லஞ்சம் பெற்ற நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

* அமைச்சர் நேரு மற்றும் அவரது குடும்பத்தினர், நெருக்கமானவர்கள் சேர்ந்து 365.87 கோடி ரூபாய் அளவுக்கு சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்துள்ளனர்.


* டிவிஎச் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் ரூ.223 கோடி, முதலீடுகள் வழியாக ரூ.36 கோடி, பினாமி நிறுவனங்கள் மூலம் ரூ.58 கோடி, தங்க முதலீடு வழியாக ரூ.2.33 கோடி, வெளிநாட்டு சொத்துக்கள் வழியாக ரூ.44 கோடி, ஆடம்பர செலவினங்களுக்கு ரூ75 லட்சம் என பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.


* ரூ.50 கோடிக்கு ஹோட்டல் வாங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

* அமெரிக்காவில் 34 ஏக்கரில் சொத்து வாங்குதல்
* சிங்கப்பூருக்கு பணம் பரிமாற்றம் நடந்துள்ளது.

* அமெரிக்காவில் ரூ.70 கோடிக்கு 3.23 கோடி ரூபாயில் இரண்டாம் சொத்து தொடர்பாகவும் குற்றச்சாட்டினை அமலாக்கத்துறை முன் வைத்துள்ளது.



* இது தொடர்பாக சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் தமிழக போலீசார் வழக்கு பதிய வேண்டும்.
* முதல் கட்ட விசாரணை என்ற பெயரில் தாமதம் செய்யக்கூடாது.



* வழக்கு பதிவதில் செய்யக்கூடிய தாமதம், ஊழல் பேர்வழிகள், ஆதாரத்தை அழிப்பதற்கு அவகாசம் கொடுத்தது போல் ஆகி விடும்.


இவ்வாறு அந்த கடிதத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement