இது எங்க 'ஏரியா'...சாதிப்பாரா சூர்யா * முதல் 'டி-20' சவால் இன்று

1

நாக்பூர்: இந்தியாவில் கிரிக்கெட் அலை ஓய்வதில்லை. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்த கையுடன், 'டி-20' சரவெடி இன்று ஆரம்பமாகிறது. இம்முறை சூர்யகுமார் (செல்லமாக சூர்யா) தலைமையில் இந்திய அணி அசத்த காத்திருக்கிறது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி வரலாறு படைத்தது. அடுத்து, இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் மோதுகின்றன. இத்தொடர் வரும் 'டி-20' உலக கோப்பைக்கு (2026, பிப்.7-மார்ச் 8) சிறந்த பயிற்சியாக அமையும் என்பதால், இரு அணிகளும் முழு திறமையை வெளிப்படுத்தும். முதல் போட்டி இன்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்க உள்ளது.
3வது இடத்தில் இஷான்
'டி-20' அரங்கில் இந்திய அணி உச்சத்தில் உள்ளது. 2024, ஜூன் 9ல் உலக கோப்பை வென்ற பின், 8 இரு தரப்பு தொடர்களை வென்றது. 29-5 என்ற கணக்கில் வெற்றிநடையை தொடர்கிறது. துவக்கத்தில் அபிஷேக் சர்மா, சாம்சன் விளாசலாம். திலக் வர்மா (அடிவயறு காயம்) இடம் பெறாத நிலையில், 3வது இடத்தில் இஷான் கிஷான் களமிறங்க உள்ளார். உள்ளூர் போட்டியில் ரன் மழை பொழிந்த இஷான், வாணவேடிக்கை காட்டலாம்.
புத்தாண்டு மாறுமா
நான்காவது இடத்தில் வரும் சூர்யகுமார் 'பார்ம்' இல்லாமல் தவிக்கிறார். கேப்டனாக அசத்தும் இவர், பேட்டராக தடுமாறுகிறார். 2025ல் 21 போட்டியில் 218 ரன் (சராசரி 13.62, 'ஸ்டிரைக் ரேட்' 123.16) தான் எடுத்தார். புத்தாண்டில் 'மிஸ்டர் 360 டிகிரி' வீரராக மீண்டும் அவதாரம் எடுக்க வேண்டும். 5வது இடத்தில் ஷ்ரேயஸ் ஐயர் வர வாய்ப்பு உண்டு. 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் வரவு அணிக்கு பெரும் பலம்.
பந்துவீச்சில் 'யார்க்கர்' பும்ரா, அர்ஷ்தீப், ஹர்ஷித் ராணா, அக்சர் படேல் அசத்தலாம். 7-15 ஓவரில் வருணின் சுழலை சமாளிப்பது நியூசிலாந்துக்கு கடினமாக இருக்கும்.
வலுவான நியூசி.,
நியூசிலாந்து அணி சான்ட்னர் தலைமையில் களமிறங்குகிறது. 'டி-20' உலக கோப்பைக்கு பின் 21 'டி-20' போட்டியில் 13ல் வென்றுள்ளது. இந்திய மண்ணில் ஏற்கனவே டெஸ்ட், ஒருநாள் தொடரை முதல் முறையாக வென்றது. இப்போது 'டி-20' தொடரை குறி வைக்கிறது. ஒருநாள் தொடரில் தொல்லை கொடுத்த டேரில் மிட்சல், கிளன் பிலிப்ஸ், டிம் ராபின்சன், சாப்மென், ரச்சின் ரவிந்திரா என பேட்டிங் படை நீள்கிறது. பந்துவீச்ச்சில் ஜேக்கப் டபி, மாட் ஹென்றி, கிறிஸ்டியன் கிளார்க், ஜேமிசன், சான்ட்னர், இஷ் சோதி கைகொடுக்கலாம்.

யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 25 'டி-20' போட்டியில் மோதின. இந்தியா 14, நியூசிலாந்து 10ல் வென்றன. ஒரு போட்டி 'டை' ஆனது.
* நாக்பூரில் ஏற்கனவே இரு அணிகளும் ஒரு முறை (2016) மோதின. இதில் நியூசிலாந்து அணி (20 ஓவர் 126/7), இந்தியாவை (18.1 ஓவர் 79/10), 47 ரன் வித்தியாசத்தில் வென்றது. அப்போது நியூசிலாந்து ஸ்பின்னர்கள் சான்ட்னர் (4-0-11-4), இஷ் சோதி (4-0-18-3) அசத்தினர்.

மழை வருமா
நாக்பூர் ஆடுகளத்தில் எளிதாக ரன் எடுக்கலாம். போகப் போக 'ஸ்பின்னர்'கள் சாதிக்கலாம்.
* இன்று நாக்பூரில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

அட்டவணை
தேதி போட்டி இடம்
இன்று முதல் 'டி-20' நாக்பூர்
ஜன. 23 2வது 'டி-20' ராய்ப்பூர்
ஜன. 25 3வது 'டி-20' கவுகாத்தி
ஜன. 28 4வது 'டி-20' விசாகப்பட்டனம்
ஜன. 31 5வது 'டி-20' திருவனந்தபுரம்
* போட்டிகள் இரவு 7:00 மணிக்கு துவங்கும்.

Advertisement