சிறு நிறுவனங்களின் தரச்சான்றிதழ் கட்டண சலுகை நீட்டிக்க பரிசீலனை

புதுடில்லி, தரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தரச்சான்றிதழ் பெறுவதற்கான கட்டண சலுகையை, 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சக கூடுதல் செயலர் பாரத் கேரா கூறியதாவது:

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தரச்சான்றிதழ் கட்டண சலுகை, 2026ம் ஆண்டு மத்தியில் முடிவுக்கு வரவுள்ளது. அதை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சலுகையின் கீழ், குறு நிறுவனங்களுக்கு 80 சதவீதம், சிறு நிறுவனங்களுக்கு 50 சதவீதம், நடுத்தர அளவு நிறுவனங்களுக்கு 20 சதவீதம் கட்டண குறைப்பு வழங்கப்படுகிறது.

இந்த சலுகையை நீட்டிக்க, இந்திய தரநிர்ணய அலுவலகமான பி.ஐ.எஸ்., பரிந்துரைத்து உள்ளது.

இந்திய தரநிர்ணய அலுவலகம், 23,000க்கு மேற்பட்ட தரநிலைகளை வெளியிட்டுள்ளது. அவற்றில், 95 சதவீதம் சர்வதேச தரநிலைகளுக்கு இணையாக உள்ளன.

ஆனால், அந்த அலுலகத்தின் சான்றிதழ்களை வைத்திருக்கும் 80 சதவீத சிறு, நடுத்தர நிறுவனங்களால் அந்த தரநிலைகளை அமலுக்கு கொண்டு வருவதில் சவால்கள் நீடிக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement