முஸ்லிம் நாடுகளுடன் சேர்ந்து 'இஸ்லாமிய நேட்டோ' அமைக்க பாகிஸ்தான் முயற்சி

13

இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா உடன் சமீபத்தில் பாகிஸ்தான் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை விரிவுபடுத்தி, அதில் பிற முஸ்லிம் நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு பரந்த கூட்டு பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க, பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.


நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவுக்கும் இடையே, கடந்தாண்டு செப்டம்பரில் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதில், இவ்விரு நாடுகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடந்தாலும் அது இரு நாடுகளையும் தாக்கியதாக கருதப்படும் என்ற பிரிவு இடம் பெற்றுள்ளது.


இந்த ஒப்பந்தத்தை விரிவுபடுத்தி, அதில் பிற முஸ்லிம் நாடுகளையும் ஒன்றிணைத்து, கூட்டு பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், தற்போது, இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் துருக்கியை இணைப்பதற்கான பேச்சு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இடையே, ராணுவ ஒத்துழைப்புக்காக, 'நேட்டோ' என்ற அமைப்பு, தற்போது நடைமுறையில் உள்ளது. அதுபோல், 'இஸ்லாமிய நேட்டோ' உருவாக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது.


''முஸ்லிம் நாடுகள் மீதான அன்னிய நாடுகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் அரசியல் அல்லது ராணுவ ரீதியாக பலவீனமடைவதை தவிர்க்க, முஸ்லிம் நாடுகள் ஒரு விரிவான பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டிய நேரம் வந்து விட்டது,'' என, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.

Advertisement