10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
இந்திய பங்குச் சந்தையில் நேற்று ஏற்பட்ட கடும் வீழ்ச்சி, முதலீட்டாளர்களை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஒரே நாளில் முதலீட்டாளர்களின் சொத்துமதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் சரிந்தது. இதன் விளைவாக, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, 465 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 455 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.
சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது மட்டுமல்லாமல், கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மிகப்பெரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2026 தொடங்கியதிலிருந்து இதுவரை நடைபெற்ற 13 வர்த்தக அமர்வுகளில், சென்செக்ஸ் 10 அமர்வுகளிலும், நிப்டி 12 அமர்வுகளிலும் சரிவுடன் முடிவடைந்துள்ளன.
இது, கடந்த, 2025ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதிக்கு பிறகு ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சதவீத இழப்பாக பதிவாகியுள்ளது.
சரிவுக்கான பின்னணி
1. காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதது
2. அன்னிய முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான விற்பனை
3. புவிசார் அரசியல் பதற்றங்கள்
4. நாடுகளுக்கு இடையே போர் சூழல் நீடிப்பது
5. பங்குச்சந்தை தரகர்கள் அனுமதிக்கும் அளவுக்கு வாங்கிய பங்குகளின் விலை குறையும்போது, விடுக்கப்படும் 'மார்ஜின் கால்'
6. மத்திய பட்ஜெட் மீது நிலவும் எதிர்மறையான எதிர்பார்ப்புகள்.
சந்தையும் ஜனவரியும்
சந்தை நிலவரம் குறித்து பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் கூறியதாவது:
புதிய ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை, அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து 29,300 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்.
நடப்பு ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்த வெளியேற்றம் வேகமடைந்துள்ளது. இருப்பினும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான விற்பனை மட்டும் நேற்றைய சந்தை சரிவுக்கான காரணம் அல்ல.
இதுவரை 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பல முன்னணி நிறுவனங்களும் அடங்கும். ஆனால், பெரும்பாலான நிறுவனங்களின் முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
இதுவே நேற்றைய சந்தை சரிவுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மேலும், நேற்று 'இண்டெக்ஸ் எக்ஸ்பைரி' இருந்ததால், மாலை 3 மணி முதல் 3.20 மணி வரை பல தரகர்கள் முதலீட்டாளர்களுக்கு, 'மார்ஜின் கால்' வழங்கியிருக்கலாம்.
இதனால் கட்டாய விற்பனை அதிகரித்து சந்தையில் திடீர் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அதோடு, வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் பெரிய ஊக்க அறிவிப்புகள் இருக்காது என்ற சந்தை எதிர்பார்ப்பும் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
கடந்த 1999ம் ஆண்டில் இருந்து 2025ம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதத்திலும் சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரண்டும் சரிவின் பாதையில் பயணித்திருப்பது ஆராய்ச்சியின் அடிப்படையில் தெரிகிறது.
உலக சந்தை தாக்கம்
அமெரிக்கா மற்றும் இந்திய பங்குச்சந்தைகளின் போக்கு எப்போதும் ஒரே திசையில் இருக்கும் எனக் கூற முடியாது. சந்தையை பாதிக்கும் காரணிகள் இரு நாடுகளிலும் வேறுபட்டவை.
தற்போதைய நிலையில், அமெரிக்காவில் பெட் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் தொடர்பான வழக்குகள், டிரம்பின் வரி விதிப்பு குறித்த உச்ச நீதிமன்ற வழக்கு, பலவீனமான நிறுவன காலாண்டு முடிவுகள், கிரீன்லாந்து விவகாரம், போர் மற்றும் அரசியல் பதற்றங்கள், இரட்டிப்பு வரி விதிப்பு போன்ற காரணங்கள் அமெரிக்க சந்தையை பாதித்து வருகின்றன.
ஆனால், இந்திய பங்குச்சந்தையின் போக்கை உள்நாட்டு காரணிகளே அதிகம் தீர்மானிக்கின்றன.
துறை வாரியான நிலை
இந்த சரிவின்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, இன்போசிஸ், எல் அண்டு டி., உள்ளிட்ட முன்னணி பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. துறை வாரியாக பார்க்கும்போது, பி.எஸ்.இ., ரியால்டி மற்றும் கேப்பிடல் கூட்ஸ் குறியீடுகள் அதிக அளவில் சரிந்தன.
சந்தை போக்கு எப்படி?
டெக்னிக்கல் அடிப்படையில், 25,000-, 25,600 புள்ளிகள் முக்கிய வரம்பாகக் கருதப்படுகிறது. 25,000 புள்ளி ஆதரவு நிலை உடைந்தால், சந்தையின் சரிவு தொடர வாய்ப்பு உள்ளது.
முதலீட்டாளர்களுக்கு
தற்போதைய சந்தை நகர்வு குறுகிய கால வர்த்தகர்களுக்கான சந்தையாக தெரிகிறது. அதனால், சிறு முதலீட்டாளர்கள் தற்சமயம் அவசரமாக சந்தையில் நுழையாமல் இருப்பது நல்லது. அதே நேரத்தில், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இந்த சந்தை ஒரு வாய்ப்பாக அமையக்கூடும்.
தரமான பங்குகள் குறைந்த விலையில் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே முதலீடு செய்திருப்பவர்கள், தங்களது போர்ட்போலியோவை ஆய்வு செய்து, அடிப்படை வலுவான பங்குகளை நீண்டகால நோக்கில் தக்கவைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

@block_G@தற்போதைய சந்தை நகர்வு, குறுகிய கால வர்த்தகர்களுக்கான சந்தையாக தெரிகிறது. அதனால், சிறு முதலீட்டாளர்கள் தற்சமயம் அவசரமாக சந்தையில்யில் நுழையாமல் இருப்பது நல்லது. அதே நேரத்தில், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இந்த சந்தை ஒரு வாய்ப்பாக அமையக்கூடும். block_G
மேலும்
-
தத்துவத்தை சட்டமாக்க முடியாது; சமூகம் கடைபிடிக்க வேண்டும்; குறளாசிரியர் மாநாட்டில் அறிவுறுத்தல்
-
திமுகவை வீழ்த்த ஒரே குடும்பமாக செயல்படுவோம்: தினகரன் சந்திப்பில் பியுஷ் கோயல் உறுதி
-
டிரம்ப் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு; அவசரமாக தரையிறக்கினார் விமானி
-
வங்கதேசத்தில் அசாதாரண சூழல்... இந்திய அதிகாரிகளின் குடும்பங்களை திரும்ப அழைத்தது மத்திய அரசு
-
மீண்டும் தேஜ கூட்டணியில் அமமுக: தினகரனுக்கு இபிஎஸ் வரவேற்பு
-
வேறு தொகுதி வாக்காளர் சேர்ப்பு கரூரில் மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு