டிரம்ப் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு; அவசரமாக தரையிறக்கினார் விமானி

15

வாஷிங்டன்: சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் விமானம், கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் வேறு விமானத்தில் டிரம்ப் குழுவினர், சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றனர்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 60க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் இன்று மாலை 7 மணிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்ற இருக்கிறார். கிரீன்லாந்து விவகாரம், ஐரோப்பிய நாடுகளுக்கான வர்த்தக வரி அச்சுறுத்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அதிபர் டிரம்ப், வாஷிங்டனில் உள்ள ஏர் போர்ஸ் ஒன் விமானத்தின் மூலம் சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார். சுமார் ஒரு மணிநேரம் 20 நிமிடம் வானில் பறந்த நிலையில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையறிந்து சுதாரித்துக் கொண்ட விமானி, மீண்டும் விமானத்தை மேரிலேண்டில் உள்ள விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார்.

இதையடுத்து, டிரம்பும் அவரது உடன் சென்ற அதிகாரிகளும் வேறு விமானத்தின் மூலம், மீண்டும் சுவிட்சர்லாந்தை நோக்கி புறப்பட்டனர். இதன்மூலம், சுமார் 2.30 மணிநேரம் தாமதமாக அதிபர் டிரம்ப் டாவோஸூக்கு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, "டாவோஸ் மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்க இருக்கிறது. அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்," என்று அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Advertisement