தத்துவத்தை சட்டமாக்க முடியாது; சமூகம் கடைபிடிக்க வேண்டும்; குறளாசிரியர் மாநாட்டில் அறிவுறுத்தல்

திருப்பூர்: ''திருக்குறள் உணர்த்தும் உயர்ந்த தத்துவத்தை சட்டமாக்க முடியாது; ஆனால், சமூகம் அதனை கடைபிடிக்க வேண்டும்,'' என, திருப்பூரில் நடந்த குறளாசிரியர் மாநாட்டில், தமிழக அரசின் திருக்குறள் பணிகள் சிறப்பு அலுவலர் ஜெயசீலன் பேசினார்.

தமிழக அரசின் சார்பில், 2026வது ஆண்டு குறள் வார விழா, குறளாசிரியர் மாநாடு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் மனீஸ் நாரணவரே, தலைமை வகித்தார். தமிழக அரசின் திருக்குறள் பணிகள் சிறப்பு அலுவலர் ஜெயசீலன் பேசியதாவது:
ஒரு சமுதாயத்திற்கு எப்போதும் வழிகாட்டும் உயர்ந்த தத்துவங்கள் அவசியம்.



அந்த தத்துவங்களை இலக்காக கொண்டு தனி மனிதன், சமூகம், நிறுவனங்கள், அரசுகள் செயல்படும் போது, எல்லோருக்குமான உயர்வு சாத்தியமாகிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகள், யாரையும் தாழ்வுறுத்தாத அணுகுமுறை, இயற்கை மற்றும் பொது வழங்கலை சமமாக பகிர்ந்தளித்தல் போன்ற மாறாத நெறிகளின் அடிப்படைகளை உலகுக்கு வழங்கியவர் திருவள்ளுவர்.



திருக்குறள் தமிழர்களுக்கான நுால் மட்டுமல்ல; அது, கல்வி கோட்பாடுகளை தாண்டிய உலக மனித சமுதாயத்துக்கான வாழ்வியல் நெறிமுறை. மொழி, நாடு, இனம் என்ற எல்லை தாண்டி, உலகளாவிய வாழ்வியல் இலக்கணக்கமாக போற்றப்படுகிறது. இந்த உயர்ந்த தத்துவத்தை பரவலாக்க வேண்டும். ஆசிரியர்களும், அரசு அலுவலர்கள் இந்த உணர்வை ஏற்றுக் கொண்டால் எதிர்கால சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்.



திருக்குறளின் நெறிகளையும், அதன் உயர்ந்த தத்துவங்களையும் சமுதாயம் முழுக்க பரப்ப தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தை குறளாசிரியர் மாநாடு உணர்த்துகிறது. ஒவ்வொரு சமுதாயத்துக்கும் தத்துவங்கள் அவசியமானவை. அனைத்து உயர்ந்த தத்துவங்கள், விழுமியங்களை சட்டமாக்க முடியாது. ஆனால், இந்த தத்துவத்தை தனி மனிதர்கள், சமூகம், நிறுவனம், அரசு கடைபிடிக்க வேண்டும். அந்த தத்துவத்தை திருக்குறள் கொண்டிருக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement