வங்கதேசத்தில் அசாதாரண சூழல்... இந்திய அதிகாரிகளின் குடும்பங்களை திரும்ப அழைத்தது மத்திய அரசு

5


புதுடில்லி: பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேசத்தில் உள்ள இந்திய அதிகாரிகளின் குடும்பங்களை மீண்டும் தாயகத்திற்கு அழைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சியில் நடக்கும் இத்தகைய சம்பவங்களை தடுத்து நிறுத்தி, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்குமாறு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அங்கு நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கையாக, அங்கு பணியாற்றும் இந்திய அதிகாரிகளின் குடும்பத்தினரை மீண்டும் தாயகத்திற்கு அழைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது; பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, டாக்காவில் உள்ள தூதரகம் மற்றும் பிற அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளின் குடும்பத்தினரை இந்தியா திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளோம். இருப்பினும், தூதரக அலுவலகங்கள் தொடர்ந்து செயல்படும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்காவில் உள்ள உயர் தூதரகம் தவிர, சிட்டகாங், குல்னா, ராஜஷாஹி மற்றும் சில்ஹெட் ஆகிய இடங்களிலும் இந்தியாவுக்கான தூதரக அலுவலகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement