அமைச்சர் நேரு துறையில் பணியிட மாறுதலுக்கு ரூ.366 கோடி லஞ்சம்: டி.ஜி.பி.,க்கு ஈ.டி., கடிதம்

11

சென்னை: அமைச்சர் நேரு துறையில், பணியிட மாறுதலுக்கு, 365.87 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டு இருப்பதாக, தமிழக டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள், மூன்றாவது கடிதம் அனுப்பி உள்ளனர்.


'நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில், 888 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்' என, அமலாக்கத் துறை அதிகாரிகள், கடந்தாண்டு அக்டோபரில், தமிழக டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு கடிதம் அனுப்பினர். அதனுடன், ஊழலுக்கான ஆதாரங்களையும் அனுப்பினர்.
பறிமுதல்


அதன் பின்னர், கடந்தாண்டு டிசம்பரில், அதே அமைச்சர் நேரு துறையில், 'டெண்டர்' முறைகேடு தொடர்பாக, 1,020 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக, இரண்டாவது கடிதம் அனுப்பினர்.



தற்போது, நேரு துறையில் பணியிட மாறுதல் செய்வதற்கு, 365.87 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டு உள்ளதாகவும், பணியிட மாறுதலுக்கு, லட்சம் ரூபாயில் இருந்து, ஒரு கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும், அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.


நேருவுக்கு நெருக்கமானவர்களின் மொபைல் போனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் வாட்ஸாப் தகவல் பரிமாற்றம் குறித்த ஆவணங்களுடன், டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு, அமலாக்கத் துறை மூன்றாவது கடிதம் அனுப்பி உள்ளது.


பினாமி




மேலும், நேரு தம்பி ரவிச்சந்திரன் நடத்தி வரும் கட்டுமான நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் வாயிலாக, 223 கோடி ரூபாய்; முதலீடுகள் வாயிலாக, 36 கோடி ரூபாய்; பினாமி நிறுவனங்கள் வாயிலாக, 58 கோடி ரூபாய்; தங்கத்தில் முதலீடு தொடர்பாக, 2.33 கோடி ரூபாய்.


வெளிநாட்டு சொத்துக்கள் வாயிலாக, 44 கோடி ரூபாய்; ஆடம்பர செலவுகளுக்கு, 75 லட்சம் ரூபாய் என, சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்து உள்ளதாக, அமலாக்கத் துறை கூறியுள்ளது.



மேலும், 50 கோடி ரூபாய்க்கு ஹோட்டல் வாங்குவது, அமெரிக்காவில், 34 ஏக்கரில் சொத்து வாங்குவது தொடர்பாகவும், அதே நாட்டில், 70 கோடி ரூ பாய்க்கு சொத்து வாங்குவது தொடர்பாகவும், நேருவுக்கு நெருக்கமானவர்கள் தகவல்களை பரிமாறி உள்ளனர் என்றும், அந்த கடிதத்தில் அமலாக்கத் துறை கூறியிருக்கிறது.


'சிங்கப்பூரில் நடந்த பணப் பரிமாற்றம், நேரு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் செய்துள்ள சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.


'முதற்கட்ட விசாரணை என்ற பெயரில் காலதாமதம் செய்யக் கூடாது. வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால், ஊழல் செய்தவர்கள், அதற்கான ஆதாரங்களை அழிப்பதற்கு அவகாசம் கொடுத்தது போல ஆகி விடும்' என, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


@block_B@ '

தி.மு.க., ஆட்சியில் நிர்வாக சீரழிவு' தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:

அமலாக்க துறை சமர்ப்பித்துள்ள விரிவான அறிக்கையில், புகைப்படங்கள், 'வாட்ஸாப்' உரையாடல்கள், 'டிஜிட்டல்' சாதனங்களில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் என, தி.மு.க., ஆட்சியில், அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களுக்காக, 365.87 கோடி ரூபாய் லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் அடங்கியுள்ளன. இதில், ஒரு பெரிய ஊழல் வலையமைப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பணி வழங்கவும், பணியிட மாற்றத்திற்கும் அரசு அதிகாரிகள், 7 லட்சம் ரூபாய் முதல், 1 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, காவல் துறைக்கு உத்தரவிடாமல் இருப்பது, தி.மு.க., ஆட்சியின் நிர்வாகம் எவ்வளது சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.block_B

Advertisement