பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துள்ள தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு புதிய அறங்காவலர்கள் நியமனம்

1

காங்கிரஸ் அறக்கட்டளை புதிய அறங்காவலர்களாக செல்வப்பெருந்தகை, தங்கபாலு, சசிகாந்த் செந்தில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

முன்னாள் முதல்வர் காமராஜரால் கடந்த 1955-ல் தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை துவக்கப்பட்டது.

இந்த அறக் கட்டளைக்கு சொந்தமாக, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

இந்த அறக்கட்டளைக்கு காங்கிரஸ் முன்னாள் பொருளாளர் மோதிலால் வோரா, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், ராஜாஜியின் கொள்ளு பேரன் சி.ஆர்.கேசவன், முன்னாள் எம்.எல்.ஏ., யசோதா ஆகிய நான்கு பேர் அறங்காவலர்களாகவும், தமிழக காங்கிரஸ் தலைவர் நிர்வாக அறங்காவலராகவும் ஏற்கனவே இருந்தனர்.

இந்த நால்வரில், சுதர்சன நாச்சியப்பன் மட்டும் தற்போது அறங்காவலராக உள்ளார். சி.ஆர்.கேசவன், பா.ஜ.,வில் சேர்ந்துள்ளார். மோதிலால் வோரா, யசோதா ஆகியோர் மறைந்து விட்டனர்.

இதற்கிடையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கூடிய தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், காங்கிரஸ் அறக்கட்டளைக்கு காலியாக உள்ள உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதன்பின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் ஆகியோரை புதிய அறங்காவலர்களாக நியமிக்க முடிவெடுக்கப்பட்டது.


- நமது நிருபர் -

Advertisement