திமுகவால் ஹிந்துக்களின் உயர் கலாசார நம்பிக்கைகளை சிதைக்க முடியாது; அண்ணாமலை

17


சென்னை: திமுகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் ஹிந்து சமுதாயத்தின் உயர் கலாசார நம்பிக்கைகளை சிதைக்க முடியாது என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக சர்ச்சை கருத்து கூறியதாக பாஜ தேசிய நிர்வாகி அமித் மாளவியா மீது திமுகவினர் தொடர்ந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது; பாஜ தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தேசியத் தலைவர் அமித் மாளவியா மீது, ஹிந்து விரோத திமுக அரசு பதிவு செய்த எப்ஐஆர் அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் கூறி, உயர்நீதிமன்ற மதுரை கிளை, அதனை ரத்து செய்துள்ளது. சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் குரல் கொடுத்த உதயநிதியின் வெறுப்புப் பேச்சைக் கேள்வி கேட்பதோ அல்லது அதற்குப் பதிலளிப்பதோ கிரிமினல் குற்றமாகாது என்றும், அது சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியது.

மேலும், திமுக மற்றும் திராவிடர் கழகத்தின் நீண்டகால ஹிந்து மத விரோதப் போக்கையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. வெறுப்புப் பேச்சைத் தொடங்கியவர் (உதயநிதி) மீது தமிழகத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் அவர் சுதந்திரமாக இருந்து வருகிறார். ஆனால், அதற்கு எதிர்வினையாற்றியவர்கள் மீது திமுக அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்குப் பதிவு செய்துள்ளது என்ற அநீதியையும் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.

நீதி வென்றுள்ளது. உண்மையை விசாரணைக்கு உட்படுத்த முடியாது. திமுகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் ஹிந்து சமுதாயத்தின் உயர் கலாசார நம்பிக்கைகளை சிதைக்க முடியாது. திமுக மற்றும் இண்டி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள், நீதிபதி ஸ்ரீமதிக்கு எதிராகவும் பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வருவார்களா?. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement