'அரசு பஸ்சில் இலவசமாக மனைவியோடும் காதலியோடும் ஆண்கள் ஊர் சுற்றலாம்': அ.தி.மு.க., மாஜி புதுவித விளக்கம்

2

சிவகாசி: “இனிமேல், மனைவியோடும் காதலியோடும் அரசு பஸ்சில் ஆண்கள் ஊர் சுற்றலாம்,” என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.


அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 'ஆண்களுக்கும் அரசு பஸ்சில் இலவச பயணம்' என அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தேர்தல் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் சிவகாசியில் நடந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:

எம்.ஜி.ஆர்., ஆட்சியைக் கொண்டு வருவதாக சிலர் கூறுகின்றனர். எம்.ஜி.ஆர்., ஆட்சியை அவரது தொண்டர்களால் மட்டுமே கொண்டு வர முடியும்.

அற்புதமான ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க., அறிவித்துள்ளது. பழனிசாமி ஆட்சிக்கு வந்த உடன், அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் மாதம் 2,000 ரூபாய் வரவு வைக்கும் திட்டத்தில்தான் முதல் கையெழுத்திடுவார்.

மகளிருக்கு மட்டும் இலவச பயண திட்டத்தை அறிவித்து, ஒன்றாக இருக்கும் குடும்பத்தில் கணவன் - மனைவியிடையே சண்டையிடச் செய்து தி.மு.க., அரசு பிரித்து உள்ளது.

பிரிந்த குடும்பங்களை சேர்க்கும் வகையில், ஆண்களுக்கும் இலவச பயணம் என்ற திட்டத்தை பழனிசாமி அறிவித்துள்ளார்.

இனிமேல், ஆண்கள் தங்கள் மனைவியோடும் காதலியோடும் அரசு பஸ்சில் சினிமாவிற்கு செல்லலாம், வணிக வளாகங்களுக்கு செல்லலாம், ஊர் சுற்றலாம்.

டில்லியில் மோடி ஆட்சி, தமிழகத்தில் பழனிசாமி ஆட்சி. இதுவே தமிழகத்திற்கு நல்லாட்சி தரக்கூடிய தருணம். சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் அமைக்க, பிரதமர் மோடி ஏற்கனவே அடிக்கல் நாட்டிய நிலையில், தமிழக அமைச்சர் மீண்டும் அடிக்கல் நாட்டியது வேடிக்கை.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement