பா.ஜ., நிர்வாகி மீதான வழக்கு ரத்து

2

மதுரை: துணை முதல்வர் உதயநிதி 2023ல், 'சனாதனத்தை கொசு, டெங்கு, மலேரியா போல ஒழிக்க வேண்டும்' என பேசினார். இதை திரித்து தவறான தகவலை வேண்டும் என்றே வெறுப்பு, வன்முறையை துாண்டும் வகையில் சமூக வலை தளத்தில் பதிவிட்டதாக பா.ஜ., அகில இந்திய தொழில்நுட்ப அணி தலைவர் டில்லியைச் சேர்ந்த அமித் மாள்வியாவிற்கு எதிராக தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி தினகரன், திருச்சி நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில், அமித் மாள்வியா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கருத்து சுதந்திரத்திற்குட்பட்டே பதிவிட்டேன். அவதுாறு பரப்பும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை.

அரசியல் உள்நோக்கில் எனக்கு எதிராக தவறாக அவசர கதியில் வழக்கு பதியப்பட்டுள்ளது. எனக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை. வழக்கை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவில், ''மனுதாரருக்கு எதிராக பதிவான வழக்கு ரத்து செய்யப்படுகிறது,'' என கூறியுள்ளார்.

Advertisement