தங்கம் அல்ல செம்பு என பதிவு செய்து சபரிமலையில் நடந்த திருட்டில் பித்தலாட்டம்

12

சென்னை: சபரிமலை அய்யப்பன் கோவில் நகைகளை திருட வசதியாக, தேவசம் போர்டு மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவன பதிவேடுகளில், 'சிலைகளில் இருந்தது செம்பு' என, பதிவு செய்ததற்கான ஆவணங்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.


கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், 4.54 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சோதனை



இது தொடர்பாக, சென்னை மற்றும் கேரளாவில், பத்தினம்திட்டா, கர்நாடக மாநிலத்தில் உள்ள நகைக்கடை உள்ளிட்ட, 21 இடங்களில், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.


இச்சோதனையில், நகைகளை திருட ஏதுவாக, 'அய்யப்பன் கோவில் சிலைகளில் இருந்தது தங்கம் அல்ல செம்பு' என, தேவசம் போர்டு மற்றும் தனியார் நிறுவன பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு இருந்ததற்கான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.


இதுகுறித்து, அமலா க்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறை கதவுகள், துவார பாலகர் சிலைகளில், 42.80 கிலோ தங்க கவசம் இருந்துள்ளது.


கடந்த, 2019ல், தங்க கவசங்கள் கழற்றப்பட்டு, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த, புரோக்கர் உன்னி கிருஷ்ணன் போத்தி என்பவர் வாயிலாக, சென்னை அம்பத்துாரில் 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.


அதற்கு முன், உன்னி கிருஷ்ணன் போத்தி மற்றும் தேவசம் போர்டு நிர்வாகிகள், 39 நாட்களாக, கோவிலுக்கு வெளியே தங்க கவசத்தை பதுக்கி வைத்து இருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளன.


நகைகளை திருட வேண்டும் என்பதற்காகவே, சென்னை அம்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கமுலாம் பூசப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்தில் இருந்து, தங்கக் கவசங்கள் மீண்டும் சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, 38.26 கிலோ தான் இருந்துள்ளது.


பண பரிமாற்றம்



உன்னி கிருஷ்ணன் போத்தி, தேவசம் போர்டு நிர்வாகிகள், 4.54 கிலோ தங்கத்தை திருடி உள்ளனர். ஆனால், சென்னை அம்பத்துார் தனியார் நிறுவன பதிவேடுகளில், 'தேவசம் போர்டு நிர்வாகிகள் செம்பு கவசத்தை தான் கொண்டு வந்தனர். நாங்கள் தான், அதில் தங்கமுலாம் பூசினோம்' என, பதிவு செய்துள்ளனர்.


அதேபோல, தேவசம் போர்டு பதிவேடுகளிலும், 'துவார பாலகர் சிலைகள், கருவறை கதவுகளில் செம்பு கவசம் தான் போர்த்தப்பட்டு இருந்தது' என, பதிவு செய்து, பித்தலாட்டம் நடந்துள்ளது.


இப்படி தங்கம் திருடப்பட்டு, அதன் வாயிலாக, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளோம். 1.30 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து ஆவணங்கள், சென்னை தனியார் நிறுவனத்திடம் இருந்து 100 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement