நகராட்சியை கண்டித்து போராட மக்கள் முடிவு

வால்பாறை: வால்பாறையில், குடிநீர் சுகாதாரமாகவும், சீராகவும் வினியோகம் செய்யாததை கண்டித்து வாழைத்தோட்டம் பகுதி மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

வால்பாறை நகரில் மட்டும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இது தவிர நாள் தோறும் இங்குள்ள தங்கும் விடுதிகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியரும் தங்கி செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் நகராட்சி சார்பில் குடிநீர் சீராக வினியோகம் செய்யாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மக்கள் கூறியதாவது:

வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, இங்குள்ள 50 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீரும் மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அசுத்தமாக உள்ளது.

சாக்கடை கால்வாயிலிருந்து வரும் கழிவு நீரும் கிணற்றில் கலக்கிறது. நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், ஆற்று நீரை பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, விரைவில் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, கூறினர்.

Advertisement