இந்தியா மீதான கூடுதல் வரியை குறைக்கலாம்; அமெரிக்க அமைச்சர் சூசகம்

5


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை 25 சதவீதமாக குறைக்க பரிசீலனை செய்யலாம் என அமெரிக்க நிதியமைச்சரும், கருவூல செயலாளருமான ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார்.


அமெரிக்க அதிபராக கடந்தாண்டு ஜனவரியில் பதவியேற்ற குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், வர்த்தக இடைவெளியை குறைக்கும் வகையில் பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார்; இந்தியா உட்பட பல நாடுகளுக்கான வரி விகிதங்களை கடுமையாக உயர்த்தினார். இதற்கிடையே, ரஷ்யா - கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் இடையேயான போரை நிறுத்த, அமெரிக்கா உட்பட பல நாடுகள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

ரஷ்யா தன் கச்சா எண்ணெயை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் வழங்கி, போருக்கான நிதியை திரட்டுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. மேலும், ரஷ்யாவின் நிதி ஆதாரத்தை தடுத்தால், போரை நிறுத்தி விடலாம் என்று நினைத்த டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா உள்ளிட்ட நாடுகள் தவிர்க்க வேண்டும் என வெளிப்படையாக எச்சரித்தார்.



உலகளவில் ரஷ்யாவிடம் இருந்து அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நம் நாட்டிற்கு பரஸ்பர வரி விதிப்புடன், அபராதமாக கூடுதல் வரி விதிப்பையும் டிரம்ப் விதித்தார். இதனால், அமெரிக்காவுக்கான இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வழக்கமாக விதிக்கப் பட்ட, 25 சதவீத வரியுடன், கூடுதலாக, 25 சதவீதமும் சேர்ந்து மொத்தம், 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை 25 சதவீதமாக குறைக்க பரிசீலனை செய்யலாம் என அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்து இருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது: ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியதற்காக நாங்கள் இந்தியாவின் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தோம்.

தற்போது ரஷ்ய எண்ணெயை வாங்குவதை இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. இந்திய சுத்திகரிப்பு நிலையங்களின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் சரிந்துவிட்டது. அது ஒரு வெற்றியாகும். இது இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளை தளர்த்துவதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.


தற்போதும் இந்தியாவின் மீதான வரிகள் அமலில் இருக்கிறது. அவற்றை நீக்க ஒரு வழி இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை 25 சதவீதமாக குறைக்க பரிசீலனை செய்யலாம். இவ்வாறு ஸ்காட் பெசென்ட் கூறினார்.

Advertisement