ஐ.சி.சி., மீது வங்கதேசம் கோபம் * உலக கோப்பை பிரச்னையில்...
தாகா: உலக கோப்பை பிரச்னையில் ஐ.சி.சி., முடிவு குறித்து வங்கதேசம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை நிலவுகிறது. இதனால், வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், கோல்கட்டா பிரிமியர் லீக் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதற்கு பதிலடியாக, 'டி-20' உலக கோப்பை தொடரில் (பிப்.7-மார்ச் 8, 2026) பங்கேற்க, இந்தியா வர, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) மறுத்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) வேண்டுகோள் விடுத்தது.
இதை ஏற்க மறுத்த ஐ.சி.சி., 'இந்தியாவில் விளையாடுவது குறித்து இறுதி முடிவெடுக்க வேண்டும்' என இரண்டாவது முறையாக கால அவகாசம் கொடுத்தது.
இதையடுத்து, நேற்று தாகாவில் உள்ள சர்வதேச ஓட்டலில் கூட்டம் நடந்தது. இதில் கேப்டன் ஷாண்டோ, ஹசன் முகமது உள்ளிட்ட வீரர்கள், பி.சி.பி., தலைவர் அமினுல் இஸ்லாம், வங்கதேச அரசின் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் பங்கேற்றனர்.
முடிவில், ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் கூறுகையில்,''இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. எங்களது போட்டிகளை இலங்கையில் விளையாட, ஐ.சி.சி., ஏற்பாடு செய்யும் என நம்புகிறோம்,'' என்றார்.
பி.சி.பி., தலைவர் அமினுல் இஸ்லாம் கூறுகையில்,'' ஐ.சி.சி., எங்களுக்கு 24 மணி நேரம் 'கெடு' விதித்தது. சர்வதேச விளையாட்டு அமைப்பு, இப்படிச் செய்ய முடியாது. இதனால் 20 கோடி பார்வையாளர்களை இழக்க நேரிடும். இது ஐ.சி.சி.,க்கு நஷ்டம். 'டி-20' உலக கோப்பையில் பங்கேற்கும் முயற்சியை கைவிட மாட்டோம்,'' என்றார்.
இரட்டை வேடம்
அமினுல் இஸ்லாம் கூறுகையில்,'' கடந்த 1996, 2003ல் நடந்த விஷயங்களை எங்களிடம் ஐ.சி.சி., தெரிவித்தது. ஆனால் 2025ல் இந்திய அணி வேண்டுகோளை ஏற்று, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் துபாய்க்கு மாற்றப்பட்டன. எங்கள் விஷயத்தில் ஐ.சி.சி., இரட்டை வேடம் போடுகிறது,'' என்றார்.
வருமா ஸ்காட்லாந்து
'வங்கதேசம் மறுத்தால், புதிய அணியை சேர்க்கலாம்,' என்ற ஐ.சி.சி., முடிவுக்கு, நிர்வாக கூட்டத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. தற்போது, வங்கதேசம் தனது முடிவில் உறுதியாக உள்ளதால், தரவரிசை அடிப்படையில், ஸ்காட்லாந்து அணி, 'சி' பிரிவில் சேர்க்கப்படலாம்.
இதற்கு முன்...
* 1996
கொழும்பு குண்டு வெடிப்பு, உள்நாட்டு போர் காரணமாக, இலங்கையில் நடந்த உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) பங்கேற்க ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மறுத்தன. இந்த இரு அணிகள் தோற்றதாக அறிவிக்கப்பட்டு, இலங்கைக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன. இலங்கை எளிதாக காலிறுதிக்கு முன்னேறியது.
* 2003
ஜிம்பாப்வேயின் அப்போதைய அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு எதிரான நிலை காரணமாக, இங்கிலாந்து அணி, உலக கோப்பை போட்டிக்காக (50 ஓவர்) ஜிம்பாப்வே செல்ல மறுத்தது. பாதுகாப்பு காரணத்திற்காக நியூசிலாந்து அணி, கென்யா செல்லவில்லை. தங்கள் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற இரு அணிகளின் கோரிக்கையை ஏற்க ஐ.சி.சி., மறுத்தது.
* 2009
இங்கிலாந்தில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க, ஜிம்பாப்வே வீரர்களுக்கு விசா வழங்க மறுத்தது இங்கிலாந்து அரசு. கடைசியில் ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது.
* 2016
வங்கதேசத்தில் நிலவிய பாதுகாப்பற்ற சூழலால், 19 வயது உலக கோப்பை தொடரில் இருந்து ஆஸ்திரேலியா விலகியது.
* 2025
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இருப்பினும் இந்தியா கோரிக்கை ஏற்கப்பட்டு, போட்டிகள் துபாய்க்கு மாற்றப்பட்டன.
இந்த மர்ம கும்பல் எங்க இருந்தாலும் பிரச்சினை தான்.. பங்களாதேஷ் உருவாக இந்தியா தான் காரணம்..
ஆனால் நன்றி இல்லாத வெறியர்கள்..மேலும்
-
'ஹள்ளி' என்ற ஊர்களின் பெயர் மாற்றப்படும்: அமைச்சர் உறுதி
-
பன்னீர்செல்வம் 'ஆப்சென்ட்'
-
அரசு பஸ்களில் 'தமிழ்நாடு' இடம் பெறாது: அமைச்சர் சிவசங்கர்
-
22 லட்சம் பேருக்கு இலவச பட்டா
-
தமிழக உள்ளாட்சி அமைப்புகள் இணைப்பு மக்கள் எதிர்ப்பால் நிறுத்திவைப்பு: நேரு
-
மருத்துவ பணியாளர்கள் இரண்டாம் நாளாக போராட்டம்