தமிழக உள்ளாட்சி அமைப்புகள் இணைப்பு மக்கள் எதிர்ப்பால் நிறுத்திவைப்பு: நேரு

சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - கோவிந்தராஜன்: கும்மிடிப்பூண்டி தொகுதி, ஊத்துக்கோட்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். இப்பகுதிகளுக்கு, தேர்வாய் கண்டிகை ஏரியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

அமைச்சர் நேரு: நகர்ப்புறம் அருகில் உள்ள ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைப்பது குறித்து, மாநில அளவில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

ஊத்துக்கோட்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தும் நடவடிக்கை, இக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பெரும்பாலான இடங்களில் ஊராட்சிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சியுடன் இணைத்தால், 100 நாள் வேலை திட்டம் நின்று விடும் என மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அந்த முயற்சியை நிறு த்தி வைத்துள்ளோம் .

அவசியம் தேவை என்ற இடங்களில் மட்டும் இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தேர்வாய் கண்டிகை ஏரியில் இருந்து குழாய் வழியாக குடிநீர் வழங்கும் பணியை, ஊரக வளர்ச்சித் துறை மேற்கொண்டு உள்ளது.

அ.தி.மு.க., - விஜய குமார்: திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. அவற்றில் தினமும் 650 டன் குப்பை சேகரமாகிறது. கடந்த 40 நாள்களாக குப்பை தேங்கியுள்ளது. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் நேரு: நாங்கள் எந்த வேலை செய்தா லும் அனுமதிப்பதில்லை. சொந்தமாக இடம் வாங்கி குப்பை கொட்ட முடிவு செய்தால், அங்குள்ளவர்கள் எதிர்க்கின்றனர். கல் குவாரியில் கொட்டலாம் என்றால், பெருந்துறை மக்கள் எதிர்க்கின்றனர்.

அமைச்சர் சாமிநாதனிடம், 'இடம் பார்த்து கொடுங்கள், அரசு செலவில் வாங்கி, குப்பை யில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்' என்றேன்.

குப்பை கொட்ட எங்கு சென்றாலும் அனுமதி கிடைப்பதில்லை. நகருக்கு வெளியே குப்பை கொட்ட தயாராக உள்ளோம்.

சென்னை, மதுரை, கோவை நகரங்களில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. அதை திருப்பூரில் ஆரம்பிக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement