குஜராத் மூன்றாவது வெற்றி * உ.பி., அணி ஏமாற்றம்

வதோதரா: டபிள்யு.பி.எல்., தொடரில் மூன்றாவது வெற்றி பெற்றது குஜராத். நேற்று உ.பி., அணியை 45 ரன்னில் வீழ்த்தியது.
குஜராத்தின் வதோதராவில் நேற்று நடந்த பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) தொடருக்கான லீக் போட்டியில் குஜராத், உ.பி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற உ.பி., அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
குஜராத் அணிக்கு பெத் மூனே, டேனி வயாத் (14) ஜோடி துவக்கம் கொடுத்தது. 'வேகத்தில்' மிரட்டிய கிராந்தி, அனுஷ்காவை, 14 ரன்னில் வெளியேற்றினார். கேப்டன் ஆஷ்லே கார்டுனர், 5 ரன் மட்டும் எடுத்தார். மூனே, 34 பந்தில் 38 ரன் எடுத்து, சோபி பந்தில் அவுட்டானார்.
ஷிகா பாண்டே பந்தில் காஷ்வீ, ஒரு சிக்சர் அடித்து நம்பிக்கை தந்தார். சுழலில் மீண்டும் ஜொலித்த சோபி, இம்முறை காஷ்வீயை (11), போல்டாக்கினார். மறுபக்கம் தனிநபராக போராடிய சோபி டிவைன், ஷிகா வீசிய கடைசி ஓவரில், இரண்டு சிக்சர் விளாசினார்.
குஜராத் அணி 20 ஓவரில் 153/8 ரன் எடுத்தது. அரைசதம் எட்டிய சோபி டிவைன் (50), குமாரி (0) அவுட்டாகாமல் இருந்தனர். உ.பி., சார்பில் கிராந்தி, சோபி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ராஜேஸ்வரி 'மூன்று'
உ.பி., அணிக்கு கேப்டன் மெக் லானிங் (14), கிரண் (0) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. லிட்ச்பீல்டு 27 பந்தில் 32 ரன் எடுத்து, ஆஷ்லே பந்தில் வீழ்ந்தார். ராஜேஷ்வரி சுழலில் தீப்தி (4), ஷ்வேதா (3), ஆஷா (7) சிக்கினர். மற்றவர்கள் ஏமாற்ற, உ.பி., அணி 17.3 ஓவரில் 108 ரன்னுக்கு சுருண்டு தோற்றது. டிரையான் (30) அவுட்டாகாமல் இருந்தார். ராஜேஸ்வரி 3 விக்கெட் சாய்த்தார்.

Advertisement