ராய்ப்பூரில் 'விசில்' சத்தம் பறக்குமா... * இந்தியா மீண்டும் வெல்லுமா

ராய்ப்பூர்: ராய்ப்பூர் 'டி-20' போட்டியில் இன்று அபிஷேக் சர்மா விளாசினால், இந்திய ரசிகர்களின் 'விசில்' சத்தம் விண்ணைத் தொடலாம்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. நாக்பூரில் நடந்த முதல் சவாலில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி, இன்று சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்க இருக்கிறது.
இஷான் கவனம்
இந்திய அணியின் பேட்டிங் படை பலமாக உள்ளது. கடந்த போட்டியில் அதிரடி துவக்கம் தந்த அபிஷேக் சர்மா (84 ரன்) மீண்டும் மிரட்டலாம். அடுத்த மாதம் 'டி-20' உலக கோப்பை துவங்க உள்ள நிலையில், சுஞ்சு சாம்சன் சுதாரிக்க வேண்டும். உள்ளூர் போட்டியில் அசத்திய இஷான் கிஷான், கிடைத்த வாய்ப்பை வீணாக்கினார். ஷ்ரேயஸ் ஐயர் காத்திருப்பதால், இன்று இஷான் கவனமாக ஆட வேண்டும். கேப்டன் சூர்யகுமார் 22 பந்தில் 32 ரன் எடுத்து 'பார்மிற்கு' திரும்பியுள்ளார். 'ஆல்-ரவுண்டர்' பணிக்கு ஹர்திக் பாண்ட்யா உள்ளார். முதல் போட்டியில் 'பினிஷர்' பணியை கச்சிதமாக செய்த ரிங்கு சிங் (20 பந்தில் 44 ரன்), நம்பிக்கை தருகிறார்.
கடந்த முறை குல்தீப் யாதவ் இடம் பெறாத போதும் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. 'வேகத்திற்கு' அர்ஷ்தீப், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, ஷிவம் துபே உள்ளனர். 'சுழலில்' வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் அசத்தினால், இந்தியா தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்யலாம்.
தேறாத பவுலிங்
நியூசிலாந்தை பொறுத்தவரை துவக்கத்தில் கான்வே, ரச்சின் ரவிந்திரா தடுமாறுவது பலவீனம். கிளன் பிலிப்ஸ், டிம் ராபின்சன், சாப்மேன், டேரில் மிட்சல் ரன் சேர்க்கலாம். கடந்த போட்டியில் பந்துவீச்சு எடுபடாததால், இந்தியா 238/7 ரன் குவித்தது. இன்று ஜேக்கப் டபி, ஜேமிசன் எழுச்சி காண முயற்சிக்கலாம். 'சுழலில்' கேப்டன் சான்ட்னர், இஷ் சோதி கைகொடுக்கலாம்.

யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 26 'டி-20' போட்டியில் மோதின. இந்தியா 15, நியூசிலாந்து 10ல் வென்றன. ஒரு போட்டி 'டை' ஆனது.
* ராய்ப்பூரில் முதல் முறையாக மோத உள்ளன.

மழை வருமா
ராய்ப்பூர், ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தின் பவுண்டரி அளவு (75-80 மீட்டர்) பெரியது. கவனமாக பேட் செய்ய வேண்டும். சுழற்பந்துவீச்சு எடுபடும்.
* இன்று ராய்ப்பூரில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

'மந்திரவாதி' வருண்
முதல் போட்டியில் 2 விக்கெட் சாய்த்த 'ஸ்பின்னர்' வருண் சக்ரவர்த்தி அசத்தினார். இது பற்றி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''மந்திரவாதி போல சுழற்பந்துவீச்சில் மாயாஜாலம் செய்கிறார் வருண். தவறு எதுவும் செய்யாமல் சிறப்பாக பந்துவீசுகிறார்,''என்றார்.

'நம்பர்-1' நாயகன்
இந்திய அணி முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்,''டி-20 அரங்கின் 'நம்பர்-1' பேட்டராக திகழ்கிறார் அபிஷேக் சர்மா. நல்ல 'பார்மில்' உள்ளார். அடுத்த மாதம் துவங்கும் 'டி-20' உலக கோப்பை தொடரில் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் இவர் விளாச துவங்கினால், இந்தியாவும் சிறப்பாக செயல்படுவது உறுதி,''என்றார்.

காம்பிர் பதில் என்ன
நாக்பூரில் நேற்று முன் தினம் நடந்த முதல் 'டி-20' போட்டியின் போது இந்திய அணி தலைமை பயிற்சியாளர் காம்பிர், காங்., எம்.பி., சசி தரூர் சந்தித்துக் கொண்டனர். பின் சமூகவலைதளத்தில் சசி தரூர் வெளியிட்ட செய்தியில்,'இந்தியாவில் பிரதமர் மோடிக்கு பிறகு காம்பிர் பணி தான் கடினமானது. விமர்சனங்களை அமைதியாக சமாளிக்கும் இவரது மனஉறுதி, தலைமைப்பண்புக்கு பாராட்டு,'என குறிப்பிட்டார்.
இந்திய அணியில் அதிகமாக அதிகாரம் செலுத்தும் காம்பிர், 'சீனியர் வீரர்களை புறக்கணிக்கிறார்; தேவையில்லாமல் பேட்டிங் வரிசையை மாற்றுகிறார்' என விமர்சிக்கப்படுவது உண்டு. இதற்கு மறைமுகமாக பதில் அளித்த காம்பிர்,'நன்றி சசி தரூர். துாசி அடங்கிய பிறகு தெளிவான சூழல் நிலவும். இது போல பயிற்சியாளருக்கு வரம்பற்ற அதிகாரம் இருப்பதாக கூறப்படுவதில் உள்ள உண்மை ஒருநாள் தெரிய வரும்,' என குறிப்பிட்டுள்ளார்.

கோப்பையில் புதுமை
சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மறுசுழற்சி செய்யப்பட்ட கிரிக்கெட் பேட், பந்துகளில் இருந்து இந்தியா, நியூசிலாந்து தொடருக்கான 'டி-20' கோப்பை உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கை வளங்களை பாதுகாத்து, எதிர்கால சந்ததிக்கு உதவிடும் வகையில், இந்திய கிரிக்கெட் போர்டுக்கு முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement