கர்நாடகாவிலும் சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் வெளிநடப்பு!
பெங்களூரு : தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும், சட்டசபையின் முதல் நாள் கூட்டத்தில் இருந்து கவர்னர் தாவர்சந்த் கெலாட் வெளிநடப்பு செய்தார். அவர் வெளியே சென்றபோது, அவர் முன்னால் சென்று கிண்டலடித்து, ஆளும் காங்கிரசார் அவமரியாதை செய்தனர். கவர்னரை தாக்க முயற்சி நடந்ததாக எதிர்க்கட்சி தலைவர் அசோக் பரபரப்பு குற்றச்சாட்டு கூறி உள்ளார். 'கவர்னரை அவமதிப்பு செய்த காங்கிரஸ் உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்' என்றும், எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. 'கர்நாடக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டத்தொடர் ஜனவரி 22ம் தேதி துவங்கும்; சட்டசபை, மேல்சபை கூட்டு கூட்டத்தொடரில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றுவார்' என்று, மாநில அரசு அறிவித்து இருந்தது. கூட்டத்தொடரில் வாசிப்பதற்காக தயாரிக்கப்பட்ட உரையை கவர்னருக்கு அனுப்பி வைத்தது.
சமரசம்
அதில், இரண்டு முதல் 11 பத்திகள் வரை, மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இருந்ததால், 'சட்ட சபையில் உரையாற்ற மாட்டேன்' என்று கவர்னர் நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு லோக் பவனுக்கு சென்ற மாநில சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல், சபாநாயகர் காதர், மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி உள்ளிட்டோர், கவர்னரிடம் சமரசம் பேசினர்.
அப்போது, 'உரையின் இரண்டு முதல் 11 பத்திகளை நீக்க வேண்டும்' என கவர்னர் வலியுறுத்த, 'திருத்தங்கள் வேண்டுமானால் செய்கிறோம்; முழுதாக நீக்க முடியாது' என, மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், கூட்டத்தொடருக்கு வருவது பற்றி கவர்னர் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஒரே நிமிடம்
இந்நிலையில், 'கூட்டத்தொடரில் உரையாற்ற கவர்னர் வருவார்' என்று, அவரது அலுவலகத்தில் இருந்து அரசுக்கு நேற்று காலையில் தகவல் வந்தது.
சரியாக, காலை 11:00 மணிக்கு பெங்களூரு விதான் சவுதா படிக்கட்டு பகுதிக்கு காரில் வந்து இறங்கிய கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை முதல்வர் சித்தராமையா, சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல், சபாநாயகர் காதர், மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஆகியோர் வரவேற்று சட்டசபைக்குள் அழைத்துச் சென்றனர் .
காலை 11:07 மணிக்கு தன் உரையை துவக்கிய கவர்னர் கெலாட், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சபாநாயகர், மேல்சபை தலைவருக்கு நன்றி தெரிவித்தார். பின், 'எனது அரசு வளர்ச்சி, சமூக நீதிக்கானது' என்று கூறியதுடன், அரசு பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து, 'ஜெய்ஹிந்த், ஜெய் கர்நாடகா' என்று கூறி, தன் உரையைஒரே நிமிடத்தில், அதாவது 11:08 மணிக்கு முடித்து கொண்டு, இருக்கையில் இருந்து இறங்கினார். அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம் வைத்தபடி வெளியே சென்றார்.
ஹரிபிரசாத் அவரை பின்தொடர்ந்து முதல்வர் சித்தராமையா, எச்.கே.பாட்டீல், காதர், பசவராஜ் ஹொரட்டி ஆகியோரும் சென்றனர்.
திடீரென காங்கிரஸ் உறுப்பினர்கள், அரசு தயாரித்து கொடுத்த உரையை முழுமையாக படிக்க வேண்டும் என்றும், கர்நாடகாவுக்கு அநீதி இழைப்பதாகவும் கூறி, கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
காங்கிரஸ் மூத்த எம்.எல்.சி., ஹரிபிரசாத், கவர்னர் முன் நின்று, 'உரையை முழுமையாக படித்து செல்லுங்கள்' என்று கூறினார். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், சட்டசபை பாதுகாவலர்கள் உதவியுடன் சட்டசபை அரங்கில் இருந்து வெளியே வந்தார். ஆனாலும், எம்.எல்.ஏ.,க்கள் பாலகிருஷ்ணா, பிரதீப் ஈஸ்வர், சரத் பச்சேகவுடா உள்ளிட்ட சிலர் கவர்னரை பின்தொடர்ந்து சென்று, கோஷம் எழுப்பி அவமரியாதை செய்தனர்.
விதான் சவுதா படிக்கட்டு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தன் காரில் ஏறி, கவர்னர் கிளம்பினார். அரசு கொடுத்த உரையை படிக்காமல் கவர்னர் வெளிநடப்பு செய்ததாலும், அவரை பின்தொடர்ந்து சென்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதாலும், விதான் சவுதா வளாகம் பரபரப்பாக காட்சி அளித்தது. கவர்னர் சென்றதும் சட்டசபை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் சபை கூடியதும், 'கவர்னர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக விவாதிக்க வேண்டும்' என, பா.ஜ., உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அது குறித்து விவாதிக்க, இன்று நேரம் ஒதுக்குவதாக சபாநாயகர் காதர் கூறினார். அதன்பின், மறைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, நாள் முழுதும் சபை ஒத்திவைக்கப்பட்டது.
@block_B@
முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டியில், “ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் துவங்குவது இயல்பு. இது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. அரசு தயாரித்து கொடுக்கும் உரையை வாசிப்பதற்கு பதிலாக, தானாக ஒரு உரையை தயாரித்து வந்து கவர்னர் படித்துள்ளார். இது, அரசியலமைப்பை மீறுவதாகும். அவர், தன் கடமையில் இருந்து தவறி உள்ளார். அவரது அணுகுமுறைக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். உச்ச நீதிமன்றத்தை அணுகலாமா என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம்,” என்றார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், “உரையை படிக்காமல் சட்டசபையை கவர்னர் அவமதிக்கவில்லை. அவர், தன் பணியை செய்து விட்டார். கர்நாடக கவர்னர்களாக பரத்வாஜ், குர்ஷித் ஆலம் பணியாற்றிய போது, அவர்களும் இதுபோன்று சில வரிகளில் உரையை முடித்துள்ளனர். இதில் என்ன தவறு உள்ளது.
“சட்டசபையை குழப்பத்தில் ஆழ்த்தியது காங்கிரஸ் உறுப்பினர்கள் தான். கவர்னர் வெளியே சென்றபோது அவரை தள்ளிவிடவும், தாக்கவும் முயற்சி நடந்தது. இன்றைய சம்பவம் கருப்பு தினத்தின் அடையாளம். அவரை அவமதிப்பு செய்த காங்கிரஸ் உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்,” என்றார்.
பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில் குமார் கூறுகையில், “காங்கிரஸ் எப்போதும் எஸ்.சி., சமூகத்திற்கு எதிராக உள்ளது. இதனால் தான் எஸ்.சி., சமூகத்தை சேர்ந்த கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை அவமதித்து உள்ளனர்,” என்றார்.block_B
@block_Y@
சட்டசபையில் நடந்த பரபரப்புக்கு பின், கவர்னரை அவரது அலுவலகத்திற்கு சென்று சபாநாயகர் காதர் சந்தித்தார். சட்டசபையில் நடந்தது பற்றி இருவரும் விவாதித்தனர்.block_Y
மேலும்
-
'ஹள்ளி' என்ற ஊர்களின் பெயர் மாற்றப்படும்: அமைச்சர் உறுதி
-
பன்னீர்செல்வம் 'ஆப்சென்ட்'
-
அரசு பஸ்களில் 'தமிழ்நாடு' இடம் பெறாது: அமைச்சர் சிவசங்கர்
-
22 லட்சம் பேருக்கு இலவச பட்டா
-
தமிழக உள்ளாட்சி அமைப்புகள் இணைப்பு மக்கள் எதிர்ப்பால் நிறுத்திவைப்பு: நேரு
-
மருத்துவ பணியாளர்கள் இரண்டாம் நாளாக போராட்டம்