துாத்துக்குடியில் ரூ.2,292 கோடிக்கு கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அடிக்கல் நாட்டினார் முதல்வர்

சென்னை துாத்துக்குடியில் 2,292 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

துாத்துக்குடி புதிய சிப்காட் தொழில் பூங்காவில், மோட்டார் வாகன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

செயற்கை நுாற்பு இழை நிறுவனம், மின்னணு உற்பத்தி நிறுவனங்கள், அறைகலன் தயாரிக்கும் நிறுவனங்களும் இங்கு செயல்பட உள்ளன.

கப்பல் கட்டுமான தொழிற்சாலை, பசுமை எரிசக்தி உற்பத்தி நிறுவனங்கள், விண்வெளி சாதன உற்பத்தி நிறுவனங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, விரைவில் கட்டுமான பணிகள் துவங்கவுள்ளன. இந்த தொழில் நிறுவனங்களின் தேவைக்காக, தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு மாற்றாக, அங்குள்ள முள்ளக்காடு கடலோர கிராமத்தில், நாள்தோறும் 60 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட, கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிப்காட் நிறுவனத்தின் 40 சதவீத பங்களிப்பு, இரண்டு தனியார் நிறுவனங்களின் 60 சதவீத பங்களிப்பு என, 2,292 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆலை அமையவுள்ளது.

இந்த கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு, தலைமைசெயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

Advertisement