ஸ்டாலின் பணம் கொடுத்ததற்கு நேரடியான ஆதாரங்கள் இருக்கிறதா? தேர்தல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி

37

'தேர்தல் சமயத்தில், கொளத்துார் தொகுதியில் வாக்காளர்களுக்கு பட்டு வாடா செய்யப்பட்ட பணம், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுடையது என்பதற்கான நேரடி ஆதாரங்கள் இருக்கிறதா?' என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


தமிழகத்தில், 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் தொகுதியில் தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்தும், அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரியும், அந்த தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சைதை துரைசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.


இந்த மனு, நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, துரைசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கடந்த, 2011ல் துணை முதல்வராகவும், தி.மு.க., பொருளாளராகவும் இருந்த ஸ்டாலின், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தார். 2011 ஏப்., 12ல் ஒரு வாகனத்தில் இருந்த, 1.80 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


இந்த பணம் கொளத்துார் தொகுதி வாக்காளர்களுக்கு வினியோகிக்க எடுத்துச் செல்லப்பட்டது. காவல் துறையினரும் உடந்தையாக இருந்தனர்' என வாதிட்டார்.


நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, துரைசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக பணம் வினியோக செய்யப்பட்டதாக வாதங்களை முன்வைத்தார்.


இதை ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் கடுமையாக மறுத்தார். இதைத் தொடர்ந்து, 'வீடியோ ஆதாரம் தொடர்பாக இருதரப்பு வாதங்களையும் ஏற்க போவதில்லை' என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.


'பணப் பட்டுவாடா தொடர்பான வீடியோ ஆதாரங்களின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்படவி ல்லை' என கூறினார்.


மேலும், 'வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பணம் ஸ்டாலினிடம் இருந்து நேரடியாக எடுத்துச் செல்லப்பட்டதா என்பதற்கான ஆதாரங்கள் இருக் கிறதா?' என, கேள்வி எழுப்பினர். அதற்கு சைதை துரைசாமி தரப்பில் இல்லை என பதில் அளிக்கப்பட்டது.



இதையடுத்து இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் பிப்., 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது


- டில்லி சிறப்பு நிருபர் -

Advertisement