கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நிம்மதி: முடா வழக்கில் லோக் ஆயுக்தா அறிக்கையை ஏற்றது கோர்ட்!

பெங்களூரு: 'முடா' வழக்கில் சித்தராமையா குற்றமற்றவர் என்று, லோக் ஆயுக்தா தாக்கல் செய்த அறிக்கையை, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதனால், சித்தராமையா தரப்பு உற்சாகத்தில் உள்ளது.


கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது.
'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில், தன் மனைவி பார்வதிக்கு, 56 கோடி ரூபாய் மதிப்பிலான, 14 வீட்டு மனைகளை வாங்கியதாக, சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது.


இது குறித்து, அவரிடம் லோக் ஆயுக்தா விசாரிக்க அனுமதி வழங்கும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா என்பவர், 2024 ஆகஸ்ட் மாதம் கடிதம் கொடுத்தார். இதன்படி, சித்தராமையாவிடம் விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு, 2024 ஆகஸ்ட் 19ல், கவர்னர் அனுமதி வழங்கினார்.

வழக்குப்பதிவு




பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றமும், சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, முதல்வரின் மைத்துனர் மல்லிகார்ஜுன சாமி, நில உரிமையாளர் தேவராஜ் ஆகியோரிடம் விசாரிக்க, மைசூரு லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டது.

விசாரணை அதிகாரியாக மைசூரு லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷ் நியமிக்கப்பட்டார். சித்தராமையா, பார்வதி உட்பட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவானது. இதற்கிடையில், 'முடா'வில் நடந்த வேறு சில முறைகேடுகளில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்தது பற்றி ஈ.டி., எனும் அமலாக்கத் துறையும் விசாரித்தது.

சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளையும் அவர்கள் விசாரித்தனர். தங்கள் மீதான பிடி இறுகியதால், 14 வீட்டுமனைகளையும், முடாவுக்கே சித்தராமையா குடும்பம் திருப்பி கொடுத்தது.

நீதிபதி அதிரடி





லோக் ஆயுக்தா விசாரணை நடத்தி, கடந்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், '14 வீட்டுமனைகளை வாங்கியதில், சித்தராமையா, பார்வதி உட்பட நான்கு பேரும் எந்த முறைகேடும் செய்யவில்லை' என்று குறிப்பிட்டிருந்தது.


'இந்த அறிக்கையை ஏற்க கூடாது' என்று, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், சிநேகமயி கிருஷ்ணா மனு செய்தார். அந்த மனுவை நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் விசாரித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி சந்தோஷ் கஜானன் பட், லோக் ஆயுக்தா சமர்ப்பித்த அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். மேலும், முடா வழக்கில் தவறு செய்த அதிகாரிகள் மீது, லோக் ஆயுக்தா மற்றும் அமலாக்கத்துறை விசாரணை தொடரவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

உற்சாகம்




சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளை இனி அமலாக்கத் துறையும் விசாரிக்க முடியாது என்பதால், முதல்வர் தரப்பு உற்சாகத்தில் உள்ளது.
இதற்கிடையே, இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Advertisement