வாளையார் சோதனைச் சாவடியில் சிக்கிய ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள்; போலீசார் விசாரணை


வாளையார்: வாளையார் சோதனைச் சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 6 கிலோ 140 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 10 கோடி என தெரியவந்துள்ளது.


கோவை மாவட்டம், வாளையார் சோதனைச் சாவடியில் இன்று (ஜன.,28) போலீசார் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாலக்காட்டிலிருந்து கோவை நோக்கி வந்த பஸ்சை நிறுத்தி சோதனை நடத்தினர்.


அப்போது, நிபின் (29) என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 6 கிலோ.140 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள்,பறிமுதல் செய்தனர்.


விசாரணையில், நிபின் என்பவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருவதாகவும், கடை உரிமையாளர் ரஹ்மான் (42) என்பவர், தங்கக் கட்டிகளை கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ஒப்படைக்க கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில், இந்த தங்கக்கட்டிகள் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement